குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து தொழிலதிபரிடம் 28 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

* கேரளாவுக்கு இன்ப சுற்றுலா சென்றதும் அம்பலம்

* கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி

சென்னை: திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் டி.வி.எஸ். ராஜசிம்மன். தொழிலதிபரான இவர், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த கே.எம்.விஷ்ணுபிரியா என்பவருடன் இணைந்து வியாபாரம் செய்து வந்தார். லாபத்தில்  முறையாக பங்கு தராததால், விஷ்ணுபிரியாவுடன் வியாபார தொடர்புகளை ராஜசிம்மன் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணுபிரியா, ராஜசிம்மனின் இரண்டு கார், மொபைல் போன் சிசிடிவி ஹார்ட்டிஸ்க் ஆகியவற்றை எடுத்துச்  சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி, கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் ராஜசிம்மன் புகார் அளித்துள்ளார்.  இதேபோல், 2018ம் ஆண்டு தனக்கு திருமணத்திற்காக  பார்த்து பேசி நிராகரித்த ஐதராபாத்தை சேர்ந்த உமாராணி என்பவருடன், விஷ்ணுபிரியா சேர்ந்து கொண்டு, தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் 20 லட்சத்தை மோசடி செய்ததாக  ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததார்.

புகாரின்படி,  இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் முறையாக விசாரணை நடத்தாமல் அவர் மீது வழக்கு பதிவு செய்து, திருமணம் முடிந்து மனைவியுடன் ரங்கம்  கோயிலுக்கு சென்ற போது ராஜசிம்மனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தார். சிறைக்கு செல்லும் போது, வைர மோதிரம், 2 செல்போன், விலை உயர்ந்த வாட்ச், கிரெடிட் கார்டு என 8 லட்சம் மதிப்புள்ள  பொருட்கள் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வத்திடம் அவர் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் அந்த பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் தானே வைத்துக்கொண்டுள்ளார். பிறகு, ராஜசிம்மனுக்கு உதவி செய்வதாக இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் உத்தரவாதம் அளித்துள்ளார். வழக்கில் இருந்து விடுவிக்க உதவியாக ₹5 லட்சம் பணம் கேட்டுள்ளார். அதன்படி தொழிலதிபர் சிறையில் இருந்தபடியே 4 லட்சம் ஏற்பாடு  செய்து கொடுத்துள்ளார். உமாராணிக்கு கொடுக்க வேண்டிய பணம் ₹20 லட்சத்தையும் கொடுத்துள்ளார்.

அதிக பணம் இருப்பதை அறிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் தொழிலதிபர் உதவியுடன் கேரளாவுக்கு தனது குடும்பத்துடன் ஒரு வாரம் இன்ப சுற்றுலா சென்று வந்துள்ளார். அனைத்து ஏற்பாடுகளையும் தொழிலதிபர்தான் செய்து கொடுத்துள்ளார்.  அப்படி இருந்தும், குற்றவாளிகளுடன் சேர்ந்து பணம் பறிக்க முயன்றது தொழிலதிபருக்கு தெரியவந்தது. உடனே இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் மீது நடவடிககை எடுக்க கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் ராஜ சிம்மன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி இ.எம்.கே. யஷ்வந்த் ராவ் இங்கர்சால்  உரிய முறையில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்யக்கோரி ஆயிரம்விளக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ஆயிரம்விளக்கு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தொழிலதிபர் சிறையில் இருக்கும் போது, அவரிடம் பறிமுதல் ெசய்யப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூல5 லட்சம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.  குற்றவாளியிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முறையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் தானே வைத்துக்கொண்டு குற்றவாளிகளுடன் சேர்ந்து பணம் எடுத்து மோசடி செய்தது உறுதியானது.  இதைதொடர்ந்து ஆயிரம்விளக்கு  போலீசார் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம், விஷ்ணுபிரியா, உமாராணி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதற்கான அறிக்கையை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.  இந்நிலையில் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஞான செல்வத்திற்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்  அதிரடியாக இன்ஸ்பெக்டர் ஞானசெல்வத்தை சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

Related Stories:

More