×

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜூனில் காங். தலைவர் தேர்தல்: காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பின்னர், காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலை நடத்த, இக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்  தலைவர் சோனியா காந்தி தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று நடைபெற்றது. இதில், மூத்த தலைவர்கள், கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் பல்வேறு அமைப்புகளுக்கான  தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கட்சியின் அடுத்த  தலைவர் தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டது.  கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வேணுகோபால், ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், ‘‘காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ஜூனில் தேர்ந்தெடுக்கப்படுவார். மாநில தேர்தல்களின் அடிப்படையில் சிறிய மாற்றங்கள் இருக்கும். மே இறுதியில் கட்சி தலைவர்  தேர்தலுக்கு மத்திய தேர்தல் குழு முன்மொழிந்துள்ளது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலுக்கு உட்கட்சி தேர்தல் இடையூறாக இருக்கக் கூடாது என உறுப்பினர்கள் ஒருமனதாக தெரிவித்தனர். கட்சி  தலைவர் தேர்வு தேதி மற்றும் இதர அமைப்புக்களுக்கான தேர்தல் முடிவுகளில் எந்த கருத்து மோதல்களும் ஏற்படவில்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி தேர்தல், கட்சியின் தலைவர் தேர்தலுக்கு முன்னதாக அல்லது பின்னர் நடத்தப்படுமா  என்பது குறித்த தெளிவு தேவை. கட்சியின் தலைவர் தேர்தல் தான் முதலில் நடத்தப்படுவது நடைமுறையாகும். இது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும்” என்றார்.

விவசாயிகள் பிரச்னையில் ஆணவம் வெளிப்படுகிறது
காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ‘‘புதிய  வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்ட விவகாரத்தில்,  அரசு உணர்வற்ற நிலையில் நடந்து கொள்வது  அதிர்ச்சி அளிக்கிறது. விவசாயிகளுடன் அரசு  நடத்தி வரும்  பேச்சுவார்த்தைகள் மூலமாக அதன் ஆணவம் வெளிப்படுகிறது. வேளாண் சட்ட  விவகாரத்தில் தொடக்கத்திலேயே காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது.  புதிய சட்டங்களை நிராகரித்தோம். ஏனென்றால், குறைந்தபட்ச  ஆதார விலை, பொது  கொள்முதல், பொது விநியோக அமைப்பு உள்ளிட்ட 3 தூண்களை அடிப்படையாக கொண்ட   உணவு பாதுகாப்பின் அடித்தளத்தை அழிக்கும் வகையில், புதிய வேளாண் சட்டங்கள்  உருவாக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

நாட்டின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம்
சோனிய காந்தி மேலும் பேசுகையில், ‘‘அர்னாப் கோஷ்வாமி விவகாரத்தில் வாட்ஸ்அப்  உரையாடல்கள் கசிந்துள்ளன. இதில், தேசிய பாதுகாப்பு ஒட்டு மொத்தமாக சமரசம் செய்யப்பட்டுள்ளது. இது, அமைதியை சீர்குலைக்கிறது. ஆனால்,  எதையும்  கேளாதது போல அரசு மவுனம் காத்து வருகின்றது. தேசபக்தி, நாட்டுப்பற்றுக்கு  சான்றிதழ் வழங்கியவர்களின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தற்போது  அம்பலமாகி உள்ளது,’’ என்றார்.


Tags : election ,state legislatures ,Working Committee Meeting , Cong in June after the election of 5 state legislatures. Chairman Election: Decision at the Working Committee Meeting
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்