பாடியநல்லூர் விஏஒ அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் குடுமிப்பிடி சண்டை: சான்றிதழ் வாங்க வந்தவர்கள் குழப்பம்

புழல்: பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் குடுமிப்பிடி சண்டையால் சான்றிதழ் வாங்க வந்த மக்கள் குழப்பமடைந்தனர்.    செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம அலுவலராக ராமலட்சுமி கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்களை அரசு  இடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், பொன்னேரி  கோட்டாட்சியர் செல்வம் கடந்த 31.12.2020 அன்று ஆட்டந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேன் மற்றும் சோழவரம் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் ஆகியோரை பாடியநல்லூர் கிராம நிர்வாக  அலுவலகத்திற்கு ஒரே நேரத்தில் பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜாகிர் உசேன், பூபாலன் ஆகியோர் பாடியநல்லூர் கிராம அலுவலகத்தில் வந்து இரண்டு பேரும் தனித்தனி சேரில் உட்கார்ந்து, “இது எனக்கான இடம்” என்று ஒருவருடன் ஒருவர் போட்டிப்போட்டுக்  கொண்டனர். மேலும் காரனோடை கிராமத்துக்கு செல்ல வேண்டிய கிராம நிர்வாக அலுவலர் ராமலட்சுமியும் அங்கிருந்து விடுவிக்கவில்லை. இதனால்  மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் குடுமிப்பிடி சண்டையிட்டனர்.  ஜாகிர் உசேன்  சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கும் தொடர்ந்துள்ளார். இதனால் சாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ் பெற வருபவர்கள் யாரிடம் சென்று கேட்க வேண்டும் என்பது புரியாமல் பொதுமக்கள் குழப்பமடைந்தனர்.

Related Stories:

>