திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

120 கிலோ குட்கா பறிமுதல்

ஆவடி: ஆவடி காமராஜர் நகர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் முருகன்(45). அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்கிவைத்து விற்பதாக நேற்று முன்தினம்  ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தியபோது, மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. கடை உரிமையாளர்  முருகனை கைது செய்து 120 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும், அவருக்கு குட்கா சப்ளைசெய்த கும்பலை தேடி வருகின்றனர்.  

வீட்டை உடைத்து கொள்ளை

பூந்தமல்லி:  மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன்(43). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இவரது வீட்டின் முன்பக்க கிரில் மற்றும் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன்  நகைகள் மற்றும் கம்ப்யூட்டரை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தனியார் பஸ் மோதி பெண் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கூவம் கொமக்கம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி திலகவதி(35). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று  காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக கூவம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது, அரக்கோணத்தில் இருந்து பெரும்புதூர் நோக்கி சென்ற தனியார் தொழிற்சாலை பேருந்து பனி மூட்டத்தின் காரணமாக திலகவதி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

5 குடிசைகள் எரிந்து நாசம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி 19வது வார்டு அம்சா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் வேலு(35). கூலி தொழிலாளி. நேற்று இவரது குடிசை வீட்டில் எதிர்பாராத மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த  பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீ வேகமாக எரிந்ததால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது, திடீரென வீட்டில் இருந்த சிலிண்டர்  வெடித்து 15 அடிக்கு உயரத்திற்கு மேலே பறந்து கீழே விழுந்தது. மேலும் தீ வீட்டில் அருகில் உள்ள அவரது சகோதரர் பொன்னுரங்கம்(32) என்பவர் வீட்டிலும், அவரது பக்கத்து வீட்டில் இருந்த ரங்கநாதன்(60), சரவணன்(35), அம்சா(55) ஆகிய 4  பேரின் வீட்டிற்கும் வேகமாக பரவியது. தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 5 குடிசை வீடுகளும் தீயில் முழுவதுமாக எரிந்து நாசமானது.

Related Stories:

>