உ.பி-யில் உள்ளாட்சி தேர்தல் என்பதால் கட்சியில் சேர்ந்த சில நாளில் நடிகைக்கு முக்கிய பதவி: ஆம் ஆத்மி கட்சி அதிரடி

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்த நடிகைக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சி பல மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் போட்டியிட்டாலும், பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில் குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் வரும் சில வாரங்களில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளதால், இந்த மாநிலங்களில் ஆம்ஆத்மி சார்பில் வேட்பாளர்கள் அதிகளவில் போட்டியிட உள்ளன்.

அதன் ஒருபகுதியாக உத்தரபிரதேச வாக்காளர்களை கவருவதற்காக மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளில் இருந்து ஆம்ஆத்மி கட்சிக்கு வருவோருக்கு புதிய பதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த திரைப்பட நடிகை பியஸ் பண்டிட் என்பவருக்கு உத்தரபிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், 10க்கும் மேற்பட்ட இந்தி, தெற்கு, போஜ்புரி படங்கள் மற்றும் வலைத் தொடர்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ஆம்ஆத்மி கட்சியின் எம்பி சஞ்சய் சிங் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் சபாஜித் சிங் கூறுகையில், ‘திரைப்படத் துறையில் சமூக சேவையாற்ற பலர் தயாராக உள்ளனர். எங்களது கட்சி அமைப்பை விரிவுபடுத்தும் வகையில் பலரை கட்சியில் இணைத்து வருகிறோம். எங்கள் கட்சியில் சேர்ந்த நடிகை பியஸ் பண்டிட்டுக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை போன்று உத்தரபிரதேசத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு வர பிரசாரம் மேற்கொள்வோம்’ என்றார்

Related Stories:

>