×

அனைத்து வகை எடை போடுவதிலும் ஏமாற்றுகிறார்கள் எடைக்கற்கள், தராசு மூலம் மோசடி செய்வது அதிகரிப்பு-ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சேலம் : துருப்பிடித்த தராசு, தேய்ந்த எடைக்கற்கள் மூலம் பொருட்கள் எடைபோடுவதில் மோசடி நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இந்தியாவில் எலக்ட்ரானிக் தராசு, இரும்புத் தட்டு தராசு உள்பட பலவகையான தராசுகள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இரும்புத் தட்டு தராசில் பொருட்கள் எடை போடுவதில் ஏகப்பட்ட மோசடி நடந்து வருகிறது.

குறிப்பாக தள்ளுவண்டி, காய்கறிகடைகளில் பயன்படுத்தும் தராசில் எடை நிறுத்துவதில் பெருமளவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இது குறித்து சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பொருட்கள் எடை போடும் தராசில் பெரும் மோசடி நடந்து வருகிறது. குறிப்பாக இரும்புத் தட்டு தராசில்தான் எடை மோசடி அதிகளவில் நடக்கிறது.

இரும்பு தராசில் உள்ள எடைக்கற்கள் அடிப்பகுதி பெருமளவில் தேய்ந்தும், துருப்பிடித்தும் காணப்படுகிறது. மேலும் கையில் நிறுத்தப்படும் எடைத்தராசில் கம்பிகள் ஆங்காங்கே வளைந்து காணப்படுகிறது. இந்த வகை தராசில் எடைக்கற்கள் வைக்கும் பக்கம் நட்டு, போல்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் ஒரு சில தராசில் பொருட்கள் வைக்கும் பக்கத்திற்கு அடியில் பெரிய அளவில் அட்டை வைத்து பொருட்களை நிறுத்துகின்றனர். தராசின் இருபக்க கூர்மைபகுதி சரிசமமாக இருப்பதில்லை. ஏதாவது ஒரு வகையில் தராசில் குளறுபடி செய்து வியாபாரிகள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருகின்றனர். இறைச்சிக்கடையில் பயன்படுத்தும் தராசில் மெகா மோசடி நடந்து வருகிறது.

இறைச்சிக்கடையில் உள்ள தராசு, எடைக்கற்கள் எப்போதும் தண்ணீரில் ஊறிக்கொண்டு தான் இருக்கிறது. இங்குள்ள எடைக்கற்கள் சீக்கிரம் எடை குறைய வாய்ப்பு அதிகம். ஒரு கிலோ பொருட்களை வாங்கிச்சென்றால், குறைந்தபட்சம் 50 கிராமும், அதிகபட்சம் 200 கிராம் வரையும்  பொருட்களின் அளவு குறைகிறது. இன்னும் ஒரு சில வியாபாரிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எடைக்கு மேல் பொருட்களை காண்பித்து, பையில் போடும் எடையை மாற்றி, ஏமாற்றிவிடும் சம்பவங்களும் தொடர்கிறது.

இதேபோல் எலக்ட்ரானிக் தராசில் அளவில் மாற்றம் செய்து ஏமாற்றி வருகின்றனர். இந்த வகை தராசில் எடைக்கு ஏற்ப அளவை குறைத்து வைத்துள்ளனர். அரசு உத்தரவுப்படி எந்த வகை தராசாக இருந்தாலும், ஆண்டுக்கு ஒருமுறை தொழிலாளர் முத்திரை ஆய்வாளரிடம் தராசு மற்றும் எடைக்கற்களுக்கு முத்திரையிட வேண்டும். ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் இதுபோன்ற முத்திரையிடப்படாத எடைக்கற்கள், தராசுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமே எடையில் ஏமாற்றப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தள்ளுவண்டி, காய்கறிக்கடை, மளிகைக்கடைகளில் உள்ள அனைத்து வகைகயான தராசுக்களையும் ஆய்வு செய்ய வேண்டும். முத்திரையிடப்பட்ட தராசு  முத்திரையிடப்படாத தராசு, எடைக்கற்கள் இருந்ததால், அவைகளை உடனடியாக பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை எச்சரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.


Tags : activists , Salem: Social activists have accused the government of fraud in weighing goods with rusty scales and worn scales.
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...