நெமிலி அருகே ₹1,20 கோடியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கால்நடைகள் புகலிடமாக மாறிவரும் அவலம்-தடுப்புச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி : நெமிலி அடுத்த பனப்பாக்கம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கால்நடைகள் வந்து செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இதில் 4 டாக்டர்கள், 3 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட  பனப்பாக்கம், மேலப்புலம், நெடும்புலி, ஜாகீர்தண்டலம்,  பொய்கைநல்லூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம  பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 400க்கும் மேற்பட்டோர் மருத்துவம் பார்க்க  வந்து செல்கின்றனர். மேலும் இந்த சுகாதார நிலையத்தில் மாதத்திற்கு 20க்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது.

இதில் கடந்த 2019ம் ஆண்டு சுமார் ₹1.20 கோடி மதிப்பீட்டில் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தர். தற்போது அந்த கட்டிடம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே உள்ளே  கண்ணாடிகள் உடைந்த நிலையிலும், கட்டிடங்களை சுற்றி முட்புதகர்களாகவும்,  மருத்துவமனைக்குள் கால்நடைகள் உள்ளே செல்கின்றன.

இதனால் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட கர்ப்பிணிகள், கால்நடைகளால் நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. மேலும்,  இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மருத்துவமனை அருகே அமர்ந்து மது அருந்துகின்றனர்.

இதனால் மருத்துவமனைக்கு பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை சுற்றி சுத்தம்   செய்து தடுப்புச்சுவர்கள்  அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>