×

கலெக்டர் சொன்னா சிஎஸ்ஆர் போடணுமா? அவர் கிட்டயே வாங்கிக்க தரக்குறைவாக பேசிய எஸ்ஐயால் கண்கலங்கிய பெண் அரசு அலுவலர்-வடக்கு காவல் நிலையத்தில் தான் இந்த அவலம்

வேலூர் : வேலூர் மாவட்ட சமூகநலத்துறையைச் சேர்ந்த மாவட்ட பெண் அலுவலர் (ஒருங்கிணைப்பாளர்), நேற்று காலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கையினை கலெக்டர் உத்தரவின்பேரில் மேற்கொண்டார். இந்நிலையில் நேற்று காலை பெண்ணை காப்பகத்தில் சேர்க்க வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் சிஎஸ்ஆர் நகல் பெறுவதற்காக சென்றுள்ளார்.

அப்ேபாது, காவல்நிலையத்தில் இருந்த எஸ்ஐ சம்பத்திடம் சென்று, கலெக்டர் உத்தரவின்பேரில், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பகத்தில் சேர்ப்பதற்கு சிஎஸ்ஆர் நகல் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு எஸ்ஐ சம்பத், கலெக்டர் சொன்னா சிஎஸ்ஆர் கொடுக்கணுமா, போய் கலெக்டர் கிட்டயே வாங்கிக்க போ, என்று தரக்குறைவாக பேசியுள்ளார்.

அரசு அலுவலர், அதுவும் பெண் அலுவலர் என்றும் பாராமல், ஒருமையில் பேசியதால், பெண் அலுவலர் கண்கலங்கியபடி வெளியே வந்துள்ளார். பின்னர் செய்வதறியாமல், பெண் அலுவலர் தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டு மீண்டும் உள்ளே சென்று எஸ்ஐயிடம் கலெக்டர் உத்தரவின்பேரில், வந்துள்ளேன் என்று மீண்டும் கூறியுள்ளார். ஆனால், அதனையும் செவி கொடுத்த கேட்காத எஸ்ஐ, போ, போய் உட்காரு நான் கூப்பிடும்போது வா? என்று பேசியுள்ளார்.

இதனால் மிகவும் மனம் வருந்திய பெண் அலுவலர் அங்கிருந்து சென்று மாவட்ட சமூகநலத்துறை அலுவலரிடம் முறையிட்டுள்ளார். அவர் கலெக்டருக்கு இதுகுறித்து புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஸ்டேஷன் இல்லன்னா ஆயிரம் ஸ்டேஷன்

இதுகுறித்து சமூநலத்துறை பெண் அலுவலர் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை காப்பகத்தில் சேர்க்க, காவல்துறையின் சிஎஸ்ஆர் நகல் இருந்தால் தான் சேர்க்க முடியும். சிஎஸ்ஆர் நகல் கேட்டால், போய் கலெக்டரிடம் வாங்கிக்கோ என்று தரக்குறைவாக பேசுகிறார். நான் என் சொந்த வேலைக்காக வரவில்லை. நான் சமூக நலத்துறை ஊழியர், பெண் என்றும் பாராமல் என்னிடம் ஒருமையில் தரக்குறைவாக பேசுகிறார்.

சாதாரண மக்கள் வந்தால், அவர்களின் நிலை என்ன? என்றே தெரியவில்ைல. எனக்கு இந்த ஸ்டேஷன் இல்லன்னா ஆயிரம் ஸ்டேஷன் இருக்குது போய் வேலையப்பாரு என்று ஒருமையில் பேசுகிறார். இதுகுறித்து எனது உயர் அதிகாரியிடமும், கலெக்டரிடமும் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மனிதர்களாகவே மதிப்பதில்லை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வடக்கு காவல்நிலையத்தில் திருட்டு, வழிப்பறி, என்ஓசி வாங்குவதற்கு என்று எந்த ஒரு தேவைக்கு சென்றாலும், அங்கிருப்பவர்கள் சக மனிதர்களாக மதிப்பதே இல்லை, என்ன வேணும், எதுக்கு வந்த, போய் ஓரமா உட்காரு, கூப்பிடும்போது வா? என்று அநாகரீக வார்த்தைகளில் பேசி, காயப்படுத்துகிறார்கள். காவல்நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்றாலே, அரசியல்கட்சியில் செல்வாக்கு உள்ளவரையோ? காவல்துறையில் தெரிந்தவர்களையோ தேடவேண்டியுள்ளது. கூலி வேலை செய்யும் எங்களை மதிப்பதே கிடையாது.

இதுபோன்ற பேர்வழிகளால் தான் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் எஸ்பி உடனடியாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட எஸ்ஐ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Collector ,police station ,CSR ,SI , Vellore: District Female Officer (Coordinator) of Vellore District Social Welfare Department, yesterday morning for the custody of a victimized woman.
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்