×

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: குடியரசு தின விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள்.!!!

சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஜனவரி திங்கள் 26-ம் நாள் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், விழாவைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Cancellation ,Government of Tamil Nadu ,Republic Day , Cancellation of students' art shows: Government of Tamil Nadu requests to avoid coming in person to watch the Republic Day celebrations. !!!
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...