சிவப்பு பிரிவின் கீழ் செயல்பட சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஒப்புதல் சான்றிதழ்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சிவப்பு பிரிவின் கீழ் வரும் ரயில் நிலையங்களுள் ‘செயல்பட ஒப்புதல்’ சான்றிதழை பெறும் முதல் ரயில் நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், ரயில் நிலையங்களால் உருவாக்கப்படும் கழிவுநீர் மற்றும் சுத்திகரிக்கப்படாத நீரை நகராட்சி கழிவுநீர் வடிகால் அமைப்புகளில் அகற்றுதல் போன்ற அளவீடுகள் மூலம் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு 100 கிலோ லிட்டருக்கு சமமான அல்லது அதற்கு அதிகமான கழிவுநீரை உருவாக்கும், வெளியேற்றும் ரயில் நிலையங்கள் சிவப்பு என்றும், 10 கிலோ லிட்டருக்கு மேல் ஆனால் ஒரு நாளைக்கு 100 கிலோ லிட்டருக்கும் குறைவானவை ஆரஞ்சு என்றும், ஒரு நாளைக்கு 10 கிலோ லிட்டருக்கும் குறைவாக கழிவு நீர் உருவாக்கும், வெளியேற்றும் ரயில் நிலையங்கள் பச்சை நிறமாக வகைப்படுத்தப்படும். சென்ட்ரல் ரயில்நிலையம், தெற்கு ரயில்வேயில் செயல்பட ஒப்புதல் பெறும் முதல் சிவப்பு வகைப்படுத்தப்பட்ட ரயில் நிலையம் ஆகும். சரியான மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய கழிவு நீர் மேலாண்மை அமைப்பு மூலம் “தூய்மை இந்தியா” என்ற சீரிய திட்டத்தினை அமல்படுத்தியதன் காரணமாகவும், கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதன் மூலமும் சென்ட்ரல் ரயில் நிலையம் இந்த சான்றிதழை பெற்றுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>