வண்ணாரப்பேட்டையில் ஓடஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை

தண்டையார்பேட்டை: கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (21), பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடகிருஷ்ணன் தெருவில் பூமாலை கடை நடத்தி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி பாட்டில் மணிக்கும் முன்விரோதம் காரணமாக, அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் சூரியபிரகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டளிகளை கத்தியால் வெட்டியுள்ளார். இந்நிலையில், சூரியபிரகாஷ் கடையில் வேலை பார்த்த எம்.சி.எம் கார்டன் பகுதியை சேர்ந்த குமாரி நேற்று இறந்ததால், அவரது இறுதி சடங்கில் பங்கேற்க சூரியபிரகாஷ் மற்றும் அவரது அண்ணன் ஜெயக்குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.

இதுபற்றி அறிந்த பாட்டில் மணி, கூட்டாளிகளுடன் சென்று, வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் சூரியபிரகாஷை வழிமறித்து வெட்ட முயன்றார். சுதாரித்துக்கொண்ட சூரியபிரகாஷ் அங்கிருந்து ஓடினார். ஆனாலும், அவரை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற ஜெயக்குமாருக்கும் வெட்டு விழுந்தது. இதை பார்த்து பொதுமக்கள் சிதறி ஓடினர். மேயர் பாசுதேவ் தெருவில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சூரியபிரகாஷ் நடுரோட்டில் துடிதுடித்து இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார், சூரியபிரகாஷ் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாட்டில் மணி மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories:

>