5 பேரை கொன்ற வழக்கு மற்றும் என்கவுன்டர் லிஸ்டில் உள்ள பிரபல தாதா சீர்காழி சத்யா முன்னாள் அமைச்சர் முன்னிலையில் பாஜவில் இணைந்தார்: மேலும் 30 வழக்குகள்; போலீசார், பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: கோவையில் ஒரே நேரத்தில் 3 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா சீர்காழி சத்யா, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நேற்று முன்தினம் அக்கட்சியில் இணைந்தார். கும்பகோணத்தை சேர்ந்தவர் ராஜா. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் 2017ம் ஆண்டு, கும்பகோணத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நோக்கில்  கோவையில் உள்ள பிரபல ரவுடி மோகன்ராம் உதவியை கொலையான ராஜாவின் ஆதரவாளர்கள் நாடினர். அப்போது ரவுடி மோகன்ராமுக்கு இடது கரமாக செயல்பட்டு வந்த தாதா சீர்காழி சத்யா, வழக்கறிஞர் ராஜாவை கொலை செய்த 3 பேரை, கோவையில் சில மாதங்களுக்கு முன்பு ஓட ஓட வெட்டி படுகொலை செய்தார்.

அதேபோல், சீர்காழியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சகோதரர்கள் இருவரை சீர்காழி சத்யா கொடூரமாக வெட்டி கொலை செய்தார். 5 பேர் கொலை வழக்கிலும் சீர்காழி சத்யாவை முதல் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். 5 கொலை உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ளது. போலீசாரின் என்கவுன்டர் பட்டியலில் சீர்காழி சத்யா முதலிடத்தில் வைத்துள்ளனர். இதுதவிர சீர்காழி சத்யா, அரசியல் பிரமுகர்களின் பின்புலத்தில் ஆள் கடத்தல், கட்ட பஞ்சாத்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ரவுடி மோகன்ராமுக்கு அனைத்து உதவிகளையும் சீர்காழி சத்யா தான் இன்றும் செய்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல தாதா சீர்காழி சத்யா, சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் மற்றும் இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் முன்னிலையில் அக்கட்சியில் நேற்று முன்தினம் இணைந்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய தாதாக்கள், ரவுடிகள் அனைவரும் பாஜவில் இணைந்து வருவது பொதுமக்கள் மற்றும் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

More
>