×

வென்றார்கள்... வந்தார்கள்... உற்சாக வரவேற்பில் வீரர்கள்

சென்னை: ஆஸ்திரேலியாவில்  டெஸ்ட் தொடரை வென்ற தற்காலிக கேப்டன் அஜிங்கிய ரகானே தலைமையிலான இந்திய அணி நேற்று  நாடு வந்து சேர்ந்தது. வெற்றி வீரர்களுக்கு நாடு முழுவதும் அவரவர் மாநிலங்களில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கேப்டன் ரகானே, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, வீரர்கள் ரோகித் சர்மா, ஷர்துல் தாகூர், பிரித்வி ஷா ஆகியோர் நேற்று மும்பை விமானநிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வந்துட்டாரு ரகானே  தாதரில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற ரகானேவுக்கு  பெண் குழந்தை ஆர்யா, மனைவி ராதிகா ஆகியோர்  சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். கூடவே அங்கு கூடியிருந்த மக்கள் மலர் தூவியும், ‘வந்துட்டாரு வந்துட்டாரு ரகானே வந்துட்டாரு’ என்று உற்சாகமாகவும் முழக்கமிட்டனர்.

முத்தத்தால் ஆறிய புண்
விக்கெட் எடுக்க வேண்டும் என்ற வெறியில் ஆஸி வீரர்கள்,  கண்டபடி பந்து வீசி இந்திய வீரர்களின் உடல்களை பதம் பார்த்தனர். அதில் அடிப்பட்டாலும் விக்கெட்டை விட்டு விடாமல் உறுதியாக பாதுகாத்தவர் சித்தேஷ்வர் புஜாரா. இந்தியாவின் இரும்பு மனிதரான புஜாரா பட்ட ‘காயங்களை முத்தமிட்டு குணமாக்குவேன்’ என்று அவரது 2வயது மகள் அதிதி தெரிவித்திருந்தாள். நாடு திரும்பிய புஜாராவின் காயங்களில் அவரது மகள் முத்தமிட்டு வரவேற்றாள். அதனால் புஜாராவின் காயங்கள் உடனடியாக ஆறியிருக்கும். அதனால் அவரும் இங்கிலாந்து தொடருக்கு உற்சாகமாக தயாராகி உள்ளார்.

தந்தை நினைவிடத்தில் சிராஜ்
ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமாகி அசத்தியவர் இன்னொருவர் முகமது சிராஜ். ஆஸ்திரேலியாவில் இருந்த போது நவம்பவர் மாதம் ஐதராபாத்தில் அவரது தந்தை முகமது கவுஸ் காலமானார். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதற்காக தந்தையின் இறுதி நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று ஐதராபாத் வந்து சேர்ந்த சிராஜ், வீட்டிற்கு செல்லவில்லை. விமானநிலையத்தில் இருந்து நேராக கையரதாபாத்தில் உள்ள தந்தையின் கல்லறைக்கு சென்று மலர் தூவி கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.
 
சென்னையில் இன்று சுழல்
சீனியர் சுழல் ஆர்.அஷ்வின், சுழல் ஜூனியர் வாஷிங்டன் சுந்தர்,  பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் துபாயில் உள்ளனர். அவர்கள் இன்று காலை சென்னை வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேற்று காலை டெல்லி போய் சேர்ந்ததும் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்படி நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அவரவர் மாநிலங்களின் கிரிக்கெட் சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Won ... came ... players in an enthusiastic welcome
× RELATED அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு