×

புனேயில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் பயங்கர தீ 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

புனே: புனேயில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தால் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்திக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு பிறப்பித்துள்ளார். புனேயில் உள்ள சீரம் நிறுவனம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியைத் தயாரித்து வருகிறது.  இந்த தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்டு வரும் மஞ்சுரி பிளாண்டில் நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது.  இதன் 4வது மற்றும் 5வது மாடிகளில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த கட்டிடத்தில் கோவிஷீல்டு மருந்து தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனால் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் முதல் கட்டமாக 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. முதலில், இந்த தீயை எளிதில் கட்டுப்படுத்த முடியும் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், தீ வேகமாக பரவி தீவிரம் அடைந்ததால் கூடுதலாக தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. சுமார் 15 தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன. கட்டிடத்தில் சிக்கித் தவித்த 9 பேரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தொடர்ந்து வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக நடைபெற்றது.   இதற்கிடையே அதே கட்டிடத்தில் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்தும் பணியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுடனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அங்கு விரைந்தனர். இந்த கட்டிடத்தில் தடுப்பூசி தயாரிப்பு பணி நடைபெறவில்லை என புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாலை சுமார் 4.30 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு 5 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் முரளிதர் மோஹல் தெரிவித்தார்.
இவர்கள் 5 பேரும் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என அவர் கூறினார். தீயில் கருகி இறந்தவர்கள் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பிபின் சரோஜ், ராம சங்கர், பீகாரை சேர்ந்த சுசில் குமார் பாண்டே, புனேவை சேர்ந்த மகேந்திர இங்கேல் மற்றும் பிரதிக் பாஸ்தே ஆகியோர் என தெரியவந்துள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கருதப்படுகிறது.

மின் கோளாறு காரணம்
தீ விபத்து பற்றி அறிந்த மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே புனே மாநகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார். முதல்வர் மேலும் கூறுகையில், ``தீ விபத்துக்கு மின் பிரச்னையே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தடுப்பூசி உற்பத்தி பணி எதுவும் பாதிக்கப்படாது’’ எனவும் குறிப்பிட்டார். முதல்வர் உத்தவ் தாக்கரே சீரம் நிறுவனத்தை நேரில் பார்வையிட இன்று பிற்பகல் 2 மணிக்கு வருகிறார்.

பிரதமர் வேதனை
சீரம் நிறுவன கட்டிட தீவிபத்தில் 5 பேர் இறந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் துரதிருஷ்டவசமாக 5 பேர் மரணம் அடைந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்கு உத்தரவு
இந்நிலையில் தீ விபத்து தொடர்பாக முழு விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக துணை முதல்வர் அஜித்பவார் தெரிவித்தார். இந்நிலையில் நேற்றிரவு துணை முதல்வர் அஜித் பவார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். சீரம் சிஇஓ ஆதார் பூனாவாலா கூறுகையில், ``தீ விபத்தில் சிலர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

Tags : fire ,death ,serum company ,Corona ,Pune , Corona vaccine maker Serum Institute in Pune in the deadly fire killed 5 people and scorched pathetic
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா