×

கன்னியாகுமரி விவேகானந்தர் - திருவள்ளுவர் பாறை இடையேயான இணைப்பு பாலத்துக்கு ஒதுக்கிய ரூ15 கோடி எங்கே?.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாகர்கோவில்: குமரி கடலில் உள்ள விவேகானந்தர் - திருவள்ளுவர் பாறைகளை இணைத்து பாலம் கட்ட ஒதுக்கப்பட்ட ரூ.15 கோடி எங்கே என்றும், பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இது முக்கடல் சங்கமிக்கும் இடம் என்பதாலும், சூரிய உதயம் மற்றும் மறைவை ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்பதாலும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், இயற்கை ஆர்வலர்களும் வந்து செல்கின்றனர். இது ஆன்மீகத்தலமாகவும் உள்ளது. ஆகவே ஏராளமான பக்தர்களும் வருகின்றனர்.

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து இயற்கையை ரசிக்கின்றனர். படகில் சென்று கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்க்கின்றனர். காந்தி மண்டம், காமராஜர் மணி மண்டபம், வரலாற்று கூடம், வியூ டவர் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்கின்றனர். இது தவிர முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசிக்கின்றனர். சீசன் காலத்தில் குறிப்பாக சபரிமலை சீசன் காலத்தில் பல லட்சம் பேர் கன்னியாகுமரிக்கு வருகின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் மனிதர்களாகவே காணமுடியும். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை மையப்படுத்தி இங்கு ஏராளமான வியாபாரங்களும் நடக்கின்றன.

அழகு பொருட்கள், கைவினை பொருட்கள், கடல் சார் பொருட்கள், கடல் உணவு உபபொருள்கள், ரெடிமேட் ஆடைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்க்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகுகளை இயக்குகிறது. ஆனால் கடல் நீரோட்டம், கடல் சீற்றம் போன்ற காரணங்களால் பெரும்பாலான நாட்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கப்படுவதில்லை.

இதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், தமிழ் ஆர்வலர்களும் திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த குறையை போக்க விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை கடலில் கரைந்த கனவாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. பாலம் கட்ட வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள், சங்கங்கள், கட்சிகள் சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. என்றாலும் இதுவரை பாலம் அமைக்கவில்லை.

இந்த நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் பாறையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்க அனுமதி பெற்றார். அதோடு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடும் பெற்றார். இதனால் பாலம் கட்டப்பட்டுவிடும் என்று அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் நிதி ஒதுக்கீடு பெற்ற பின்னரும் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இது பெரும் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவருக்கு வானுயர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதை அருகில் நின்று ரசிப்பதற்கு வசதியாக இரு பாறைகளையும் இணைத்து பாலம் அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய பொது செயலாளர் முனைவர் பத்மநாபன் விடுத்துள்ள கோரிக்கை மனுவில், குமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகுகள் திருவள்ளுவர் பாறைக்கு அலையின் சீற்றம் காரணமாக அடிக்கடி செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு இரண்டு பாறைகளையும் இணைத்து ஒரு பாலம் கட்டுவது தான். இந்த பாலம் அமைப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ரூ.15 கோடி ஒதுக்க நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் அந்த பணி இன்று வரை நடக்கவில்லை. ஒதுக்கப்பட்ட பணமும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இதில் மத்திய அரசு உடனே தலையிட்டு உடனடியாக பாலம் கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க ேவண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் பாறைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்த குறையை போக்க விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் பாறைக்கும் இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை கடலில் கரைந்த கனவாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது. பாலம் கட்ட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன. என்றாலும் இதுவரையிலும் ஏனோ பாலம் அமைக்கவில்லை.

வடமாநில காண்டிராக்டர்கள்
கடல் நடுவே பாலம் கட்டும் அளவுக்கு குமரியில் பெரிய நிறுவனங்கள் இல்லை. வட மாநிலங்களில் உள்ள காண்டிராக்டர்கள் மூலம் தான் இது போன்ற பாலங்களை கட்ட முடியும். தற்போது வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெரிய நிறுவனம் கட்டுமான பணியை மேற்கொள்ள முன் வந்து இருக்கிறது. விரைவில் அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்து பாலம் கட்ட வேண்டிய இடத்தை பார்வையிடுவார்கள். அதன் பிறகே நிதி முறையாக ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags : link bridge ,Thiruvalluvar ,Kanyakumari Vivekanandar , Where is the ₹ 15 crore allotted for the link bridge between Kanyakumari Vivekanandar - Thiruvalluvar rock? .. Central government demands action
× RELATED செல்லூர் இணைப்பு பாலத்தில் மின் விளக்குகள் அவசியம்