×

அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்பு: கமலா ஹாரிசின் சொந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

மன்னார்குடி: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோபிடன் நேற்று பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்றார். இதற்கான விழா வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வெளி வளாகத்தில் நடந்தது. துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோ மேயர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்கா நாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இந்நிலையில், அமெரிக்க பெண் துணை அதிபராக கமலாஹாரிஸ் பதவியேற்றதை தொடர்ந்து அவரின் பூர்வீக கிராமமான பைங்காநாடு துளசேந்திபுரத்தில் கிராமமக்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், கமலாஹாரிசின் குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலில் அவரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை, அபிேஷகம் செய்யப்பட்டது. இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக எங்கள் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலாஹாரிஸ் பதவி ஏற்றுள்ளது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகளவில் எங்கள் கிராமம் பிரபலம் அடைந்துள்ளது. கமலாஹாரிஸ் தனது பூர்வீக கிராமத்திற்கு ஒரு முறையேனும் அவசியம் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறினர்.

கோயிலுக்கு சித்தி விசிட்
கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு பிறகு கமலாஹாரிசின் சித்தியான சென்னையில் வசிக்கும் பிரபல மருத்துவர் சரளாகோபாலன், இந்த கோயிலுக்கு வந்து கமலா ஹாரிஸ் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து சென்றதாகவும், அவரது வருகை மிக ரகசியமாக வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Vice President ,US ,hometown ,Kamala Harris , Inauguration of US Vice President: Fireworks explode in Kamala Harris' hometown
× RELATED திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் ஒருவரை...