×

கடலில் மூழ்கடித்து 4 மீனவர்கள் கொலை?.. நெடுந்தீவு அருகே 2 பேர் உடல் மீட்பு: 6 மாவட்ட மீனவர்கள் மறியல்; பதற்றம்

அறந்தாங்கி: கோட்டைபட்டினம் அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கி மாயமான 4 மீனவர்களில் 2 பேரின் உடல் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை மீட்டு அந்நாட்டுக்கு கொண்டு சென்றது. படகை உடைத்து மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படை மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி கோட்டைபட்டினத்தில் இன்று 6 மாவட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடந்த 18ம் தேதி 214 விசைப்படகுகளில் 900 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசேசு(50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதேபகுதியை சேர்ந்த மெசியா(30), உச்சிப்புளியை சேர்ந்த நாகராஜ்(52), செந்தில்குமார்(32), மண்டபத்தை சேர்ந்த சாம்சன் டார்வின்(28) ஆகிய 4 மீனவர்கள் சென்றனர். அனைத்து படகுகளும் கரைதிரும்பிய நிலையில் ஆரோக்கியசேசு படகு மட்டும் கரை திரும்பவில்லை. 18ம் தேதி நள்ளிரவு ஆரோக்கியசேசுவின் விசைப்படகு நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மீனவர்களின் படகின் மீதுமோதிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் படகின் பின்புறம் சேதம் அடைந்து தண்ணீர் புகுந்தது.

இதை பார்த்த மீனவர்கள் வாக்கி டாக்கி மூலம் மற்ற மீனவர்களுக்கு தகவல்ெகாடுத்தனர். ஆனால் அப்பகுதியில் இலங்கை கடற்படையினர் இருந்ததால் மற்ற மீனவர்கள் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த மீனவர்களையும், படகையும் காணவில்லை. படகு கடலில் மூழ்கி மீனவர்களும் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்து கரை திரும்பிய சக மீனவர்கள் விசைப்படகு சங்கம் மற்றும் மீன்வளத்துறை கடலோர காவல் குழுமத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீன்வளத்துறையின் அனுமதியோடு 3 விசைப்படகுகளில் 12 மீனவர்கள், மாயமான மீனவர்களை தேடி கடலுக்கு சென்றனர். இவர்கள் சர்வதேச எல்லைவரை தேடியும் கிடைக்காததால் மீண்டும் கரை திரும்பினர்.

நேற்று 20 மீனவர்கள் 5 விசைப்படகுகளில் சென்று தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நெடுந்தீவு அருகே நேற்று நள்ளிரவு கடலில் மிதந்த செந்தில்குமார் மற்றும் ஒரு மீனவரின் உடல்களை இலங்கை கடற்படை மீட்டு அந்நாட்டுக்கு கொண்டு சென்றது. இதுபற்றி இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கப்பலால் மோதி படகை உடைத்து 4 மீனவர்களை இலங்கை கடற்படை கொலை செய்ததாக தமிழக மீனவர்கள் கொந்தளித்துள்ளனர். இந்நிலையில், மீட்கப்பட்ட 2 மீனவர்கள் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு தமிழகத்துக்கு உடனே அனுப்ப வேண்டும், மேலும் 2 மீனவர்களை கண்டுபிடித்து தரவேண்டும், தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,

கொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்தில் அரசு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் இன்று காலை திரண்ட புதுக்கோட்ைட, தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம் மீனவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. இதனால் அங்கு பரபரப்பு, பதற்றம் ஏற்பட்டுள்ளது.


Tags : fishermen ,sea ,district fishermen ,Nedundeevu , 4 fishermen drowned in the sea? .. 2 bodies rescued near Nedundeevu: 6 district fishermen stir; Tension
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...