வேலூரில் மணல் கொள்ளையால் பாழடைந்து வரும் நிலையில் பாலாற்றில் ரசாயன நச்சு கலந்து நுரையுடன் ஓடும் கழிவுநீரால் பெரும் ஆபத்து: நிலத்தடி நீர் மாசுபடுவதை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வேலூர்: வேலூரில் மணல்கொள்ளையால் பாழடைந்து வரும் நிலையில் பாலாற்றில் நச்சு கலந்த நுரையுடன் கூடிய கழிவுநீரால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். வேலூர் பாலாற்றில், முன்பு மழை வெள்ளம் பால்போல ஓடியது. இதனால் பாலாறு என்று பெயர் பெற்றது. இந்த பாலாற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரைக்கொண்டு, பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், நீர் பாசன வசதி பெற்றனர். இப்படி பாலாற்றை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். காலப்போக்கில், பாலாற்றில் ஆக்கிரமிப்பு, இரவு, பகல் பாராமல் நடக்கும் மணல் கொள்ளை போன்ற சம்பவங்களால் பாலாறு, பாழாறாக மாறியது.

இப்படி மணல்கொள்ளையர்களால் சுரண்டப்பட்ட பாலாற்றில் மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றொரு புறம், தோல்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரையும், நேரடியாக பாலாற்றில் விட்டு, மேலும் பாழாக்கி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி, வேலூர், ராணிப்பேட்டை என்று 3 மாவட்டங்களிலும் பாலாற்றில், நச்சு கலந்து கழிவுநீர் கலக்கிறது. கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வதில்லை. இதனால் பாலாற்றில் நச்சு கலந்து மிக ஆபத்தான நுரையுடன் கூடிய கழிவுநீர் கலக்கும் நிலையாக உள்ளது. இந்நிலையில், வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து காட்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லவும், விஐடி பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என்று இந்த பாலாற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் இந்த பாலாற்றில், நச்சு கலந்து நுரையுடன் கருமை நிறத்தில் கழிவுநீர் செல்கிறது. இந்த பாதையை பயன்படுத்தி வரும் மக்களும், நச்சு கலந்த கழிவுநீரில் இறங்கி செல்வதால் அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. பாலாற்றை பாதுகாக்க வேண்டிய மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டுகொள்ளாத நிலை நீடிக்கிறது. இதனால் பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மாசடைந்து குடிநீரும் மெல்ல, மெல்ல குடிக்க லாயக்கற்ற நிலைக்கு மாறிவருகிறது. எனவே மாவட்ட கலெக்டர், உடனடியாக பாலாற்றில் கலக்கும் நச்சு கலந்த, கழிவுநீர் குறித்து ஆய்வு செய்து, எங்கிருந்து இந்த கழிவுநீர் வெளியேறுகிறது என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சத்துவாச்சாரி- காங்கேயநல்லூர் பாலம் பணிகள் மந்தம்

சத்துவாச்சாரி- காங்கேயநல்லூர் இடையே பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக தரை மேம்பாலம்  அமைப்பதற்கு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது இத்திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளுக்கு மட்டும் 22.53 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நில எடுப்பு பணி முடிந்தவுடன் சுமார் ₹60.00 கோடியில் புதிய சாலை மற்றும் தரை மேம்பாலம் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலம் எடுப்பு பணிகள் மந்தகதியில் உள்ளதால், அப்பணிகளை துரிதப்படுத்தி, பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>