மரக்காணம் பகுதியில் தொடர் கனமழை அறுவடைக்கு தயாரான 7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்

* கண்டுகொள்ளாத அதிகாரிகள் *  விவசாயிகள் வேதனை n மணிலா, உளுந்து பயிர்களும் நாசம்

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் வண்டிப்பாளையம், கோணவாயன்குப்பம், கூனிமேடு, ஓமிப்பேர், ராயநல்லூர், நல்லம்பாக்கம், அசப்பூர், ஆலத்தூர், நடுக்குப்பம், தேவிகுளம், கிளாப்பாக்கம், அனுமந்தை, ஆத்திக்குப்பம், வட அகரம், கந்தாடு, காணிமேடு, புதுப்பாக்கம் உள்பட 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கடந்த 3 மாதத்திற்கு முன், நெல் பயிர்களை நடவு செய்து இருந்தனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பருவமழை சில வாரங்கள் கடந்து துவங்கியது. பருவமழை துவங்கியது முதல் பரவலாக மழை பெய்து வந்தது. ஆனால் வங்கக் கடலில் அடுத்தடுத்து, உருவான புயலின் காரணமாக இப்பகுதியில் கனமழை பெய்தது.  

 இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இந்த மழைநீரை நம்பி இங்குள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் மணிலா, உளுந்து, தர்பூசணி, நெல், காராமணி போன்ற பயிர்களை நடவு செய்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கடந்த ஒரு வாரமாக கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இதனால், இப்பகுதியில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

 இதனால், விவசாயிகள் நடவு செய்த மணிலா, உளுந்து, தர்பூசணி போன்ற பயிர்களின் விதைகள் முளைக்கும் முன்பே நிலத்திலேயே அழுகி நாசமாகிவிட்டன. இது போல் முளைத்து சிறிய செடியாக இருந்தவைகளும் அழிந்துவிட்டன. மேலும் இப்பகுதியில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர்களும் நீரில் மூழ்கி நிலத்திலேயே முளைத்து அறுவடை செய்ய முடியாமல் நாசமாகிவிட்டன. இதன் காரணமாக விவசாயிகள் பயிர் செய்ய வாங்கிய கடனுக்கு வட்டிக்கூட கட்ட முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல் செல்வாக்கு உள்ள விவசாயிகளுக்கே நிவாரணம்  

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், எங்கள் பயிர்கள் சேதம் அடைந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகளோ தற்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்யவில்லை. இதற்கு மாறாக புயலின் போது ஏற்பட்ட சிறிய பாதுப்புகளை மட்டுகே கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு  அனுப்பி உள்ளனர். உதாரணமாக, 5 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ள ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் மட்டுமே பாதிப்பு என்று கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர். அதுவும் பாரபட்சமான முறையில் அரசியலில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைக்கும் படி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி உள்ளனர்.   ஏழை விவசாயிகளை அதிகாரிகள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

எனவே இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி தற்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாய பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து உடனடியாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>