71 அடியை நெருங்கியதால் வைகை அணையில் மத்திய நீர்வளக்குழு ஆய்வு

ஆண்டிபட்டி: முழு கொள்ளளவான 71 அடியை நெருங்கியதால் வைகை அணையில் மத்திய நீர்வள குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை, தொடர் மழையால் முழு கொள்ளளவை (72 அடி) எட்டியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அணை நிரம்பி காட்சியளிப்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மத்திய நீர்வள குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அணையின் மதகு, நீர்த்தேக்க பகுதிகள், நீர்மட்டத்தை குறிக்கும் கருவி, மழையளவு குறிக்கும் இயந்திரம் மற்றும் 58ம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும் தொடர்மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகும்பட்சத்தில் தண்ணீரை வெளியேற்ற மதகுகள் போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர்.

வைகை அணையை பொறுத்தவரையில் பெரிய மதகு 7, சிறிய மதகு 7 என மொத்தம் 14 மதகுகள் வழியாக ஒரே நேரத்தில் 64 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்ற முடியும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒருவேளை மழை அதிகமாக பெய்து நீர்வரத்து 64 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக வந்தால், அணையில் இருந்து தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

முன்னதாக மத்திய நீர்வள குழுவினர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூலவைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு, மேகமலை வனப்பகுதிகள், பெரியாறு ஆறு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். ஆய்வுப்பணியில் வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் குபேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>