தெற்கு ரயில்வேக்கு 13 செட் புதிய ரயில் பெட்டிகள் ஓதுக்கீடு திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையே நேரடி ‘மெமு’ ரயில்கள்: பயணிகள் சங்கம் கோரிக்கை

நாகர்கோவில்:  திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி வழித்தடத்தில் மெமு ரயில் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு 13 செட் புதிய மெமு ரயில் பெட்டிகளை ஓதுக்கீடு செய்துள்ளது. இந்த ரயில்பெட்டிகளில் அதிக அளவு திருவனந்தபுரம் கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட இருக்கின்றன. இவ்வாறு திருவனந்தபுரம் கோட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் மெமு ரயில் பெட்டிகளை வைத்து கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகள் பயன்படும் வகையில் திருவனந்தபுரம் - திருநெல்வேலி நேரடி மெமூ ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாலும், பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதாலும், குமரி மாவட்ட பயணிகள் அதிக அளவில் தற்போது ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து தினமும் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கல்வி பயில வேண்டி ஆயிரக்கணக்கானோர் தினசரி வந்து செல்கின்றனர். குமரி மாவட்ட பயணிகள் திருநெல்வேலிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றனர். திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் பயணிக்கின்றனர்.

நாகர்கோவிலிருந்து ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து வீதம் திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் மார்க்கம் தினசரி ஐந்து பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைப்போல் மறுமார்க்கம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு 6 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றது. ஆனால் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மார்க்கம் இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்ததில் ஒரு ரயிலான நாகர்கோவில்-கோவை ரயில் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றப்பட்டு நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரே ஒரு பயணிகள் ரயில் தான் இயக்கப்படுகின்றது. இந்த இரண்டு பகுதிகளும் ஒரே கோட்டத்திற்கு உள்ளே தான் அடங்கியுள்ளது.

இந்தநிலையில் திருவனந்தபுரம் கோட்டம் 2020-21-ம் ஆண்டுற்கான புதிய ரயில்கால அட்டவணையில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் 56311-56304 ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து ஜூலை 2020 முதல் நீட்டிப்பு செய்து இயக்கலாம் என்று திட்ட கருத்துரு தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு அனுப்பியது. ஆனால் தெற்கு ரயில்வே மண்டலம் இந்த ரயில் நீட்டிப்புக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

மெமு ரயில் சாதாரண பயணிகள் ரயில்களை காட்டிலும் வேகமாக இயக்கபடுவதால் இதில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணநேரம் கணிசமாக குறையும்.  மெமு ரயில் பெட்டிகளில் அதிமான எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்க முடியும். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மற்ற ரயில்களுக்கு இஞ்சின் மாற்றுவது போன்று இந்த ரயிலுக்கு இஞ்சின் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே திருவனந்தபுரம் -திருநெல்வேலி நேரடி வழித்தடத்தில் மெமு ரயில் இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரியின் மெமு நிலவரம் என்ன?

கொல்லத்தில் மெமு ரயில்களை பராமரிக்கும் பனிமனை உள்ளதால் திருவனந்தபுரம் கோட்டத்தில் இயக்கப்படும் அனைத்து மெமு ரயில்களும் கொல்லத்தை மையமாக வைத்தே இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி- கொல்லம் ரயில் வெள்ளிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் என வாரத்திற்கு 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை இயக்காமல் இருப்பதால் வார விடுமுறைக்கு கேரளாவுக்கு செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இந்த விபரம் பயணிகளுக்கு தெரியாத காரணத்தால் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவு பயணிகள் ரயில் நிலையம் வந்துவிட்டு ரயில் இல்லாத காரணத்தால் காத்திருந்துவிட்டு அடுத்து உள்ள ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்த மெமு ரயிலின் பராமரிப்பு பணிகள் கொல்லம் பணிமனையில் வைத்து வெள்ளிக்கிழமை செய்வதால் இந்த ரயில் வெள்ளிக்கிழமை இயக்கப்படாமல் உள்ளது.

Related Stories:

>