×

திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்:   திம்பம் மலைப்பாதையில் தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து காரணமாக தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து தேங்காய் மட்டை பாரம் ஏற்றிய லாரி கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. லாரி 14வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கவிழ்ந்ததால், திம்பம் மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

  இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மலைப்பாதையில் நின்றிருந்த இருந்த வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. மலைப்பாதையில் லாரி கவிழ்ந்ததால், தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags : Thimphu , Truck overturns on Thimphu Hill Road: 3 hours of traffic damage
× RELATED பூட்டான் நாட்டில் நவீன மருத்துவமனையை திறந்துவைத்தார் பிரதமர் மோடி