×

ஜி.எஸ்.டி., பெருமுதலாளிகளால் நசிவுப்பாதைக்கு செல்லும் ஜவுளித்துறை: கடும் அதிருப்தியில் தொழில் முனைவோர்

சேலம்: இந்தியாவின் 2வது பெரும் தொழிலான ஜவுளி உற்பத்தியானது பெருமுதலாளிகளின் நடவடிக்கையால் நசிவுப்பாதைக்கு செல்வதாக மூத்த தொழில் முனைவோர் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து பிரதானமாக இருப்பது ஜவுளி உற்பத்தி. இந்த ஜவுளி உற்பத்தியின் எல்லைகள் பல்வேறு நிலைகளை கடந்து வருகிறது. ஜவுளி உற்பத்திக்கு ஆதாரமாக இருப்பது நூல். இந்த நூலானது விவசாயிகள் சாகுபடி செய்யும் பருத்தியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் பருத்தியில் இருந்து பருத்திக் கொட்டையை பிரிக்கும் ஜின்னிங் கம்பெனிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.
அடுத்து பருத்தியிலிருந்து  நூலினை நூற்கும் ஸ்பின்னிங் மில் ஆலைகள் ஒவ்வொன்றும் தங்களிடம் இருக்கும் இயந்திரங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட கவுண்ட் முதல் ஒரு குறிப்பிட்ட கவுண்ட் வரை என்ற அளவிலேயே நூல் நூற்று விற்பனை செய்கின்றனர். இதற்கடுத்து  நூலிலிருந்து துணிகளை நெய்யும் நெசவுத் துறை. இந்தத் துறையில்தான் வெவ்வேறு விதமான தொழில் நடந்து வருகிறது.

ஸ்பின்னிங் மில் வைத்திருப்பவர்களே பெரிய அளவில் அதி நவீன தறி இயந்திரங்களை வாங்கி துணிகளை நெய்தும் வருகிறார்கள். இரண்டாவது பிரிவாக, ஸ்பின்னிங் மில் இல்லாமலேயே மிகப் பெரிய அளவில் அதி நவீன நெசவு இயந்திரங்களை  இயக்கி தொழில் செய்தும் வருகிறார்கள். இவர்கள் தறிகளுக்குத் தேவையான பாவினை தயார் செய்யும் சைசிங் இயந்திரத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளனர். இன்னொரு பிரிவினர் நடுத்தர அளவில் தறிகளை இயக்கி,  துணி நெய்து தொழில் செய்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவரும், பெரும்பாலும் தங்களுக்குத் தேவையான பாவுகளை வெளி இடங்களில் உள்ள சைசிங் கம்பெனிகளிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களில் சிலர் வெறும் தறி கூலிக்கு மட்டும் துணி நெய்து கொடுப்பார்கள். மற்றும் சிலர் முதல் போட்டு மூலப்பொருள் (பருத்தி) வாங்கி துணியினை உற்பத்தி செய்து சந்தையில் விற்று தொழில் செய்து வருகிறார்கள். இன்னொரு பிரிவு மிகக் குறைந்த அளவில் நவீன இயந்திரங்களைத் தருவித்து கூலிக்கு தறிகளை ஓட்டி தங்களது தொழிலைச் செய்து வருகிறார்கள்.

இந்த பிரிவுகள் போக விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் என்று மிகக் குறைந்த அளவில் தறிகளை அமைத்து தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் துணி நெய்து தொழில் செய்து வருகிறார்கள். நடுத்தர  மற்றும் சிறிய அளவில் தறிகளை அமைத்துத் தொழில் செய்யும் தறி முதலாளிகளுக்குப் பாவுகள் ஓட்டிக் கொடுப்பதற்கு என்றே சில சைசிங் ஆலைகள் இயங்கி வருகின்றன. சைசிங் பசைக்கான விலை, மற்றும் உற்பத்தி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் கூலியை நிர்ணயம் செய்து கொள்கிறார்கள். நெசவு  பிரிவில் தறிகளில் இருந்து உற்பத்தியாகும் துணிகளுக்கு விலை நிர்ணயம் என்பது நூலுக்கு விலை நிர்ணயம் செய்வது போன்று இருப்பதில்லை. மூலப் பொருளின்( நூலின்) விலை, தறிகளுக்கு வேண்டிய பாவு தயார் செய்வதற்கான சைசிங் கூலி, தறி கூலி என்று மட்டும் சேர்த்து, துணியின் விலையை நிர்ணயம் செய்யும் வழக்கமே தொடர்ந்து இருந்து வருகிறது.

இதேபோல்  நிட்டிங் (பனியன்)  வகையிலும் துணிகள் தயாரிக்கப்படுகின்றன. இது போக ‘நாண் ஓவன்’  என்ற முறையிலும், குறைந்த அளவில், துணிகள் தயாரிக்கப்படுகின்றன, அவற்றின் நடைமுறைகள் வேறு மாதிரி இருந்த போதிலும்,  பிராசசிங் கம்பெனிகளில்  துணிகளை வெள்ளைப்படுத்துதல், துணிகளுக்குச் சாயம் போடுதல், துணிகளில் பிரிண்ட்டிங் செய்தல் போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இதனால் ஜவுளித்துறையில் முதலாளிகள், பொது மேலாளர்கள், ஆலை மேலாளர்கள், பகுதி மேலாளர்கள், சூப்பர்வைசர்கள், அலுவலக அலுவலர்கள், தொழிலாளர்கள் என்று பலர் நேரிடையாகவும், ஏஜென்டுகள், ஆடிட்டர்கள், டிரான்ஸ்போர்ட், ஆய்வு மையங்கள், கிளை தொழிற்கூடங்கள், கல்லூரிகள், போன்ற பல சேவை நிறுவனங்கள் என்று பலர் மறைமுகமாகவும் பலர் தங்களது பங்கை செலுத்தி வருகிறார்கள். இந்த ஜவுளித் துறையில் நடைபெறும் பணிகளைப் பொறுத்து தொழிலாளர் துறை, வங்கிகள், இ.எஸ்.ஐ. அலுவலகம், பி.எப். அலுவலகம் போன்ற அரசாங்க அமைப்புகளும் தங்களது அலுவல்களைத் தொடர்ந்து வருகின்றன.

இந்த வகையில் ஜவுளித்துறையில் பல ஆண்டுகளாக தமிழக மக்களில் 20சதவீதம் பேர், ஜவுளி உற்பத்தியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரும் முதலாளிகளின் நடவடிக்கையால் இந்த ஜவுளித்துறை நசிந்து வருகிறது என்று மூத்த தொழில் முனைவோர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜவுளி உற்பத்தி துறையில் பல்லாண்டு அனுபவம் பெற்ற மூத்த தொழில் முனைவோர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஜவுளி உற்பத்தி துறையில் முதலாளிகளாக சிலர் மட்டுமே இருக்க முடியும் என்ற ஒரு குறையைத் தவிர, குறை சொல்ல ஏதும் இல்லாத காலம் 1990 வரையில் இருந்தது.1991 ல் உலக மயமாக்கலில் இந்தியா தன்னை ஐக்கியப்படுத்த முனைந்த பிறகு இந்த நிலை மாறிவிட்டது. 2000 ல் எக்ஸ்போர்ட் செய்வதற்கு கோட்டா தேவையில்லை என்று வந்தபிறகு பல சிறு,குறு, நடுத்தர முதலாளிகள் உருவாகினர்.

அதன் பின்னர் லாபம் மட்டுமே குறிக்கோளாக முதலாளிகளும், தங்களது அனுகூலம் மட்டுமே முக்கியமாக இருந்த தொழிலாளிகளும் வெவ்வேறு துருவங்களில் பயணிக்க ஆரம்பித்தனர். 2005 க்குப் பின்னர் முதலாளிகள் அனைவருமே தொழிலாளிகளைச் சார்ந்தே (அதுவும் வெளி மாநிலத் தொழிலாளிகள்) இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அது இன்றுவரை தொடர்ந்து நீடித்து வருகிறது. சிறு, குறு முதலாளிகள் உருவான பிறகு, அவர்களுக்கும் பெரிய முதலாளிகளாக வளர்ந்தவர்களுக்கும் இடையில் நடுத்தர முதலாளிகள் சின்னாபின்னப்படுத்தப்பட்டனர். பெரிய முதலாளிகள் விற்பனை வரி, சென்ட்ரல் எக்ஸைஸ் வரி, இம்போர்ட் இயந்திரங்களுக்கு குறைவான விலை என்று பல்வேறு முறைகேடுகளை செய்தனர். எக்ஸைஸ் வரி மற்றும் விற்பனை வரி இல்லாமல் நூல் வாங்கிவிட்டு, துணிகளை எக்ஸ்போர்ட் செய்து, டி.இ.பி.பி. சலுகையையும் பெற்றனர்.

நடுத்தர முதலாளிகளுக்கு இதற்கு வழியில்லாமல் போய்விட்டது. இதற்கு முடிவு கட்டும் வகையில் அரசு பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது நடுத்தர ஜவுளி உற்பத்தியாளர்களை வெகுவாக பாதித்துள்ளது. பெரும் முதலாளிகள் லாபம் ஈட்டிய நிலையில் நடுத்தர உற்பத்தியாளர்கள் மெல்ல வளர்ந்து வந்தனர். இந்த நேரத்தில் ஜிஎஸ்டி என்பது பெரும் சோதனையாக மாறிவிட்டது. இதுவே தொழில் நசிவுக்கு முக்கிய காரணம்.

இதற்கு தீர்வு காண நூலுக்கும் கவுண்ட் வாரியாக, தரம் வாரியாக குறைந்த பட்ச விலை மற்றும் அதிக பட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்தரத்திற்கு ஏற்ப துணிகளுக்குக் குறைந்த பட்ச விலை,அதிக பட்ச விலை ஆகியவற்றை காடா, வெள்ளை, சாயம் போட்ட, பிரிண்டட், யார்ன் டைடு, எம்பிராய்டரி போன்ற பல வகையறாக்களை வகைப்படுத்த வேண்டும். சைசிங் கூலி, நெசவுக்கூலி, சாயக்கூலி (நூல் மற்றும் துணிகளுக்கு), தையற்கூலி, எம்பிராய்டரி கூலி போன்ற அனைத்துக் கூலிகளுக்கும் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கூலிகளை நிர்ணயம் செய்ய வேண்டும். இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் நசிவில் இருந்து ஜவுளித்துறையை மீட்கலாம்.இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

ஆர்வம் காட்டாத அரசு
‘‘பருத்தியை ஜவுளித்துறைக்கு மூலப்பொருளாக அமைத்துக் கொடுக்கும் விவசாயிகளின் நலன் சில ஆண்டுகளாக ‘குறைந்த பட்ச பாதுகாப்பான விலை’’ என்ற அளவில் அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பின்னர் அந்த பருத்தி, ஆடையாக ஆகும் வரை இருக்கும் பிரிவுகளில் உள்ளவர்களின் நலன்களில் அரசாங்கம் எந்த அளவிலும் ஆர்வம் காட்டவில்லை,’’ என்பதும் தொழில் முனைவோரின் ஆதங்கமாக உள்ளது.


Tags : bosses ,Entrepreneurs , GST, textile sector on the verge of collapse by big bosses: Entrepreneurs in deep dissatisfaction
× RELATED தேர்தல் செலவுக்கு 2 பெரிய முதலாளிகள்...