×

புதுவையில் கொண்டுவரப்பட்ட உள்ஒதுக்கீடு சட்டம் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போக செய்யும்!: ஐகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு..!!

சென்னை: புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு தர மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்படுவது என்பது நீட் தேர்வை நீர்த்துப்போக செய்துவிடும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டுவரப்பட்டு, மாணவர் சேர்க்கையும் முடிவடைந்துள்ளது. இதேபோல் புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு சட்டம் கொண்டுவந்து அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இன்னும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில் புதுவை சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில் புதுவை மாநில அரசு கொண்டுவந்த சட்டத்தினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் மத்திய அரசின் உள்துறை சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ஒரே நாடு ஒரே தகுதி என்ற அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் புதுவை மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பது நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போக செய்துவிடும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள உள்ஒதுக்கீடு சட்டம் தங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்று மத்திய அரசு வாதிட்டது. புதுவை அரசின் சட்டம் குறித்து முடிவெடுக்க தங்களுக்கு 6 வார கால அவகாசம் வேண்டும் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயம் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கை என்றும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளை கொச்சைப்படுத்தும் நடவடிக்கை எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சட்டம் குறித்து 4 வாரத்தில் முடிவெடுத்து உரிய பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.


Tags : New, Allocation, Need, Dilution, iCourt, Federal Government
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...