குன்னூரில் கழிப்பறையை ஆக்கிரமித்து கடை அமைத்த ஆளுங்கட்சி பிரமுகர்: நடவடிக்கை எடுக்க நகராட்சி தயக்கம்

குன்னூர்:  நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரண்டு மாடிக்கு மேல் கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் தற்போது  கட்டிடங்கள் கட்ட சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால்  அரசியல் தலையீடு மற்றும் அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஆற்றினை ஆக்கிரமித்து நான்கு முதல் ஐந்து மாடிகள் வரை கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். அவற்றிற்கு குன்னூர் நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் அவ்வப்போது நோட்டீஸ் மட்டுமே வழங்கி  வருகின்றனர்.  ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குன்னூர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பறையின் முன்புறத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் திடீரென கழிப்பறையை ஆக்கிரமித்தபடி புதிதாக கடை ஒன்றை துவங்கி உள்ளார். இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயங்கி வருகின்றனர். உள்ளாட்சித்துறை அமைச்சரின் தலையீடு இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் ராஜாஜி நகர் பகுதியில் நகராட்சி இடத்தினை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தினை நகராட்சி அதிகாரிகள் இடித்து சென்றனர். ஆனால் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கழிப்பறையை ஆக்கிரமித்து அமைத்துள்ள கடையை அதிகாரிகள் அகற்ற தயக்கம் காட்டி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>