அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் புதிய பூகம்பம் சிறந்த வீரரை தேர்வு செய்ததிலும் ஆள்மாறாட்ட மோசடி அம்பலம்

* பனியன் ஒன்று; வீரர்கள் இரண்டு

* அடுத்தடுத்த முறைகேடுகளால் பரபரப்பு

அலங்காநல்லூர்,: அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் அடுத்தடுத்து வெளிவரும் முறைகேடு புகார்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலி தங்கக்காசு புகாரை தொடர்ந்து, சிறந்த வீரர் தேர்விலும் ஆள் மாறாட்டம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை.  கடந்த காலங்களில் இந்த போட்டிகளில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளைகள் தேர்வில், பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. தற்போது இந்தப் புகார்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கடந்த 15ம் தேதி நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் 17 காளைகள் பிடித்து 2வது பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்ட பொதும்புவை சேர்ந்த பிரபாகரன், தனக்கான ஒரு பவுன் தங்கக்காசு, கோப்பையை வாங்க மறுத்து விட்டார். அப்போது பேசிய பிரபாகரன், ‘‘நான் 17 காளைகளை பிடித்து, கடைசியில் 18வது காளையும் பிடித்தேன். எல்லைக்கோடு வரை மாட்டுடன் சென்றேன். ஆனால், கமிட்டியில் இருந்தவர்கள் பிடிக்கவில்லை என்று அறிவித்து விட்டனர். கடந்த முறை கார் பரிசு பெற்றதால், இந்த முறையும் காரை பெற்று விடக்கூடாது எனக் கருதி இப்படி செய்துவிட்டனர். நான் நீதிமன்றம் செல்வேன்’’ என கூறியிருந்தார்.

இதுதொடர்பாக மதுரை  கலெக்டரிடமும் புகார் மனு கொடுத்துள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டில் பிரபாகரன் 21 காளைகளை பிடித்ததாக வீடியோ ஆதாரம் உள்ளதாக கூறப்படுகிறது. இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டவர் மதுரை விராட்டிபத்துவை சேர்ந்த கண்ணன். இவர், பனியனை மாற்றி அணிந்து வந்து, தான் அதிக காளைகள் பிடித்ததாக தேர்வு பெற்று கார் பரிசு பெற்றது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது, கடந்த 16ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் 33ம் நம்பர் பனியன் அணிந்த ஹரிகிருஷ்ணன் என்பவர்  முதல் சுற்றில் களம் இறங்கியுள்ளார். 3 சுற்றுகளுக்கு பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் 33ம் நம்பர் பனியனை கழற்றி, மற்றொரு நபரான கண்ணனிடம் வழங்கிவிட்டு வெளியேறியுள்ளார். அந்த பனியனை அணிந்துகொண்டு களமிறங்கிய  கண்ணன் 12 காளைகள் பிடித்துள்ளதாக கணக்கிடப்பட்டு முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.

ஏற்கனவே ஹரிகிருஷ்ணன் பிடித்த 7 காளைகள், கண்ணன் பிடித்த 5 காளைகள் சேர்த்து 33ம் நம்பர் பனியன் அணிந்தவர் அதிக காளைகளை பிடித்ததாக  வருவாய்த்துறை கணக்கிட்டு முதலிடத்துக்கு தேர்வு செய்துள்ளனர். ஆனால், மருத்துவ பரிசோதனை பதிவேட்டில் 33ம் நம்பரில் கண்ணன் பெயர் இடம் பெறவில்லை. அதில் ஹரிகிருஷ்ணன் என்றே குறிப்பிடப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்ட விழாவில் போலியான, தரமற்ற தங்கக்காசுகளை பரிசாகக் கொடுத்ததாக புகார் எழுந்தது. தற்போது சிறந்த வீரர்கள் தேர்விலும் குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.

விதிமீறல்களும் அதிகரிப்பு

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெறும் வேஷ்டி, துண்டு மற்றும் பண முடிப்பே பரிசாக இருந்தது. அப்போதெல்லாம் முறைகேடுகள் இல்லை. தற்போது பரிசு தொகை அதிகரிக்கவே முறைகேடுகளும் அதிகரித்துள்ளன.  அவிழ்த்து விடும் காளைகளை விட மும்மடங்கிற்கு பதிவு செய்து, காளை வளர்ப்போர் பலர் கடைசி வரை காத்திருந்தும் அவிழ்க்க முடிவதில்லை. வரிசைப்படி, முறைப்படி காளைகளை அவிழ்க்காமல், வேண்டிய காளைகள் முன்வரிசைக்கு கொண்டு வரும் விதிமீறல்கள் அதிகரித்துள்ளன’’ என்றனர்.

Related Stories:

>