அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிசின் சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்

மன்னார்குடி: அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றதையொட்டி மன்னார்குடி அருகே சொந்த கிராமத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோபிடன் நேற்று இரவு பதவியேற்றார். அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ்சும் பதவியேற்றார். இதற்கான விழா, வாஷிங்டனில் கேபிடாவில் உள்ள நாடாளுமன்ற வெளி வளாகத்தில் நடந்தது. துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோ மேயர், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமெரிக்க நாட்டின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்நிலையில், பைங்காநாடு துளசேந்திபுரத்தில் கிராம மக்கள் நேற்று காலை பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், கமலாஹாரிசின் குலதெய்வ கோயிலான தர்ம சாஸ்தா கோயிலில் அவரின் பெயரில் சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக எங்கள் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலாஹாரிஸ் பதவி ஏற்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் எங்கள் கிராமம் பிரபலம் அடைந்துள்ளது. கமலாஹாரிஸ் தனது பூர்வீக கிராமத்திற்கு ஒரு முறையேனும் அவசியம் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவரின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என கூறினர்.

Related Stories:

>