மாநகராட்சி பூங்காக்களில் யோகா பயிற்சி: எஸ்டிஎம்சி நிலைக்குழு பரிந்துரை

புதுடெல்லி: தெற்கு டெல்லி மாநகராட்சி யில் கடந்த டிசம்பரில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் நடத்துவதற்காக, அதன் நிலைக்குழு உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட கூட்டத்தில், மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்காக்களில் யோகா கற்பிக்கலாம் எனும் அம்சம் உள்பட மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டக் கூடிய வேறு பல விஷயங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, சொத்து வரி உயர்த்துவது எனும் பேரவை முடிவை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

கொரோனா பிரச்னை காரணமாக குடும்பத்தில் வருவாய் பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில் மக்களுக்கு கூடுதலாக வரிச்சுமையை அதிகரிக்கக் கூடாது என உறுப்பினர்கள் ஒரு சேர குரல் கொடுத்ததால், சொத்து வரி அதிகரிப்பை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. அது போல, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், குடியிருப்பு சங்கங்கள்  சொத்துவரி நிலுவையை ஒரே தவணையில் செலுத்தினால் 20 சதவீதம் தள்ளுபடி எனும் பட்ஜெட் அம்சத்தையும் நிலைக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். அடுத்ததாக, எஸ்டிஎம்சி நிர்வாகத்தில் உள்ள பூங்காக்களில் யோகா கற்பிக்கலாம் என தீர்மானம் செய்யப்பட்டது. அதையடுத்து யோக கற்பித்தலுக்கு பயிற்சியாளர்களை நியமிக்க பேரவைக்கு உடனடியாக பரிந்துரையும் செய்தது. யோகா கற்பித்தலுக்காக கணிசமான கட்டணம் வசூலிக்கவும் உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்தனர். கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட அம்சங்கள் அனைத்தும் பரிந்துரையாக பேரவை தலைவருக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories:

>