7 சாலைகள் மறுசீரமைப்பு பணி 2 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: தலைநகரில் மறுவடிவமைக்கப்பட்டு வரும் ஏழு சாலைகளின் திட்டப்பணிகளை குறிப்பிட்ட இரண்டு ஆண்டு காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் ஏற்கனவே உள்ள சாலைகளின் அருகில் உள்ள திறந்தவெளி பகுதிகளையும் உள்ளடக்கி மறுவடிமைப்பு செய்யும் பணிக்கு டெல்லி அரசு கடந்த 2019ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஒவ்வொரு சாலையும் 100 அடி அகலம் கொண்ட ஏழு சாலைகள் சுமார் 540 கிமீ தூரத்திற்கு மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சாலைகளின் மறுவடிவமைப்பு திட்டப்பணிகள் குறித்து முதல்வர் கெஜ்ரிவால் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தி ஆய்வு செய்தார். அப்போது, இந்த ஏழு சாலைகளின் திட்ப்பணிகளை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இரண்டு ஆண்டு காலத்திற்குள் முடிக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதுபற்றி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மறுவடிமைப்பு செய்யப்பட்டும் இந்த ஏழு சாலைகளில் பசுமை வழித்தடம், சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகளுக்கு தனி வழித்தடம், சாலையை ஒட்டிய சுவர்களில் ஈர்க்கும் விதத்திலான வடிவமைப்பு, திறந்தவெளி பூங்கா, ஆட்டோ மற்றும் இ-ரிக்‌ஷாக்களை நிறுத்த பார்க்கிங்கிற்கு தனி இடவசதி உள்ளிட்டவையும் இந்த மறுவடிவமைப்பில் இடம்பெற உள்ளது. இந்த சாலை மறுவடிவமைப்பு பணிகள் முடிவடைந்தால் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல பிரச்னைகள் முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் முதல் நோக்கம் மற்றும் முன்னுரிமை என்பது, இலகுவான வாகன போக்குவரத்து சீராக செல்ல வேண்டும் என்பது தான். இரண்டாவது நோக்கம், சாலையை ஒட்டியுள்ள திறந்தவெளி இடங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதாகும். இதில், மோட்டார் வாகனங்கள், மோட்டார் அல்லாத வாகனங்கள், பாதசாரிகளுக்கான சாலை என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நிலையான உயரத்திற்கு ஏற்ப  மறுவடிவமைப்பு செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ள பாதைகள் பாதசாரிகளின் வசதிக்காக சராசரியாக 10 அடி அகலமாக இருக்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>