×

பைக்கை சவமாக்கி பாடை கட்டி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சம் தொட்டதை கண்டித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் வெளியில் மாநில காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு காரணமாக டெல்லியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.85 என புதிய உச்சத்தை எட்டியது. கொரோனாவால் புரட்டி போடப்பட்ட பொருளாதார சரிவு காரணமாக வேலை வாய்ப்பு இழந்தும், வருமானமின்றியும் தவிக்கும் மக்களுக்கு, பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தி பெட்ரோல் அமைச்சகத்தின் வெளியில் காங்கிரசின் மாநில இளைஞரணி சார்பில் போராட்டம் அரங்கேறியது. இளைஞரணி தலைவர் பி வி ஸ்ரீனிவாச் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விலை உயர்வால் செத்துப் போனதை சித்தரிக்கும் வகையில், மோட்டார்பைக்கை பாடையில் ஏற்றி பேரணியாக வந்து அக்கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். போராட்டம் தொடர்பாக ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் கடுமையாக சரிந்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பு கண்டு வருகிறது. நல்ல நாட்கள் வரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியது இதைத் தானா? அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைவாக உள்ள நிலையில், இங்கு மட்டும் விலை அதிகரிப்பதன் மர்மம் என்ன? மக்களின் நலன் கருதி அதிகரிப்பு செய்த விலையை மத்திய அரசு உடனடியாக குறைத்து அறிவிக்க வேண்டும்’’, என கொந்தளித்தார். அது போல, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட மத்திய அரசு நிறைவேற்றாதது வெட்கக்கேடு என மத்திய அரசை கண்டித்த காங்கிரசின் இணை செயலரும், தேசிய இளைஞரணி பொருப்பாளருமான கிருஷ்ணா அல்லவரு, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் பின்னணியில் உள்ள கொள்ளையை தடுத்து நிறுத்து, மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் விலை குறைப்பை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

Tags : protests ,Congress , Congress protests against petrol, diesel price hike
× RELATED போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க கோரி...