தங்கவயல் மகாத்மா காந்தி மார்க்கெட் கடைகள் ஏலம் விடும் விஷயத்தில் யார் பக்கம் நியாயம்? கடைகள் அடைப்பதால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

தங்கவயல்: தங்கவயல் நகரசபைக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடும் விஷயத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் இடையில் கடும் கருத்து மோதல் உள்ளது. இந்த விஷயத்தில் யார் சொல்வது நியாயம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் கருத்து பதிவு செய்கிறோம். தங்கவயல் நகரசபைக்கு சொந்தமான ராபர்ட்சன்பேட்டை மற்றும் ஆண்டர்சன்பேட்டை பகுதியில் ஆயிரத்து 844 கடைகள் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்யாமல் குறைவான வாடகையில் வர்த்தகம் செய்துவந்தனர். இதனிடையில் கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இயங்கிவரும் கடைகளுக்கு புதிய வாடகை நிர்ணயம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ஏற்று தங்கவயல் நகரசபையில் கடந்த 2015 செப்டம்பர் 29ம் தேதி நடந்த கவுன்சில் கூட்டத்தில் வாடகை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் நகரசபையின் முடிவை ஏற்காமல் வியாபாரிகள் வாடகை உயர்த்தியுள்ளதை ரத்து செய்யக்கோரி தங்கவயல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த சமயத்தில் மாநில அரசின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட மறு உத்தரவில் நகரசபை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் கடைகளை மறு ஏலம் விட வேண்டும். இதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 18 சதவீதம் அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. அரசின் இந்த அதிரடி உத்தரவுகள் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாடகை உயர்த்தி நகரசபை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வியாபாரிகள் தாக்கல் செய்த மனுவை தங்கவயல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி நீதிபதி ரவிகுமார் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்பில், நகரசபை கடைகளுக்கு வாடகை உயர்த்தி எடுத்துள்ள நடவடிக்கை சரியானது. வியாபாரிகள் சரியாக வாடகை செலுத்தாமல் புறக்கணித்துள்ளதால், நகரசபைக்கு ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வாடகை தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, வியாபாரிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து வியாபாரிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அம்மனு நீதிபதி நாராயணசாமி முன்பு விசாரணை நடந்து கடந்த 2016 செப்டம்பர் 6ம் தேதி வழங்கிய தீர்ப்பில், கடைகளுக்கு வாடகை உயர்த்தி நகரசபை எடுத்துள்ள முடிவு நியாயமானது. அதை உறுதி செய்து கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது. மேலும் சமூகநீதி அடிப்படையில் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு நியாயம் கிடைக்க வசதியாக தற்போதுள்ள ஆயிரத்து 800க்கும் மேற்பட்டவர்களை உடனடியாக காலி செய்துவிட்டு மறு டெண்டர் விட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் ராபர்ட்சன்பேட்டை, 1வது கிராசில் உள்ள 30க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கடைகள் ஏலம் விடுவதை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்தனர். அதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடைகள் மறுஏலம் விடுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இவ்வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2019ல் வழங்கிய தீர்ப்பில், நகரசபைக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததுடன், கடைகள் ஏலம் விடும் பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

நகரசபை கடைகளுக்கு வாடகை உயர்த்தியதை எதிர்த்தும், இட ஒதுக்கீடு அடிப்படையில் ஏலம் விட வேண்டும் என்று மாநில அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் வியாபாரிகள் மேற்கொண்ட அனைத்து சட்ட போராட்டங்களும் தோல்வியில் முடிந்தது. அதே சமயத்தில் கடைகள் ஏலம் விடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டாண்டுகள் கடந்தும் இன்னும் ஏலம் விடாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் ஏலம் விடாமல் தவிர்த்தால் தங்கவயல் நகரசபை மட்டுமில்லாமல் மாவட்ட நிர்வாகங்களும் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதால் கடைகள் ஏலம் விடும் முடிவை நகரசபையும் மாவட்ட நிர்வாகமும் எடுத்துள்ளது.

இதனிடையில் கடைகள் ஏலம் விடும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாத்மாகாந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்கள் கடைகள் திறக்காமல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். நகரசபை கேட்கும் டெபாசிட் கட்டுகிறோம். நகரசபை நிர்ணயம் செய்யும் வாடகை செலுத்துகிறோம். ஆனால் கடைகள் ஏலம் விடாமல் நாங்களே தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பது வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கையாகவுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டிய கடமை நகரசபைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் உள்ளது.

வியாபாரிகள் கடை அடைப்பு நடத்தி வருவதால், கடந்த மூன்று நாட்களாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தை மாதம் பிறந்துள்ளதால், பல குடும்பங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சமயத்தில் கடைகள் மூடப்பட்டுள்ளதால், பொருட்கள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதுடன் பங்காருபேட்டை, பேத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அவசரத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி வருகிறார்கள். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதும் பொதுமக்களின் கருத்தாகவுள்ளது.

Related Stories:

>