வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன்பு, அடுத்து அதிபராக இருப்பவரை வரவேற்று சுமூகமான ஆட்சி மாற்றத்துக்கு அடையாளமான ஜோதி பரிமாற்றம், புதிய அதிபரை பற்றி அறிந்து கொள்ளும் அறிமுக நிகழ்ச்சி உள்ளிட்ட எந்தவிதமான பாரம்பரிய நிகழ்விலும் டிரம்ப் பங்கேற்கவில்லை. அதே போல, 21 குண்டுகள் முழங்க, ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வெள்ளை மாளிகையில் இருந்து அவரை வழி அனுப்பும் நிகழ்ச்சியிலும் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை. அதற்கு முன்பே, வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறினார்.

அதற்கு முன்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இறுதி வீடியோவில் டிரம்ப், ‘‘இந்த வாரம், நாட்டில் புதிய நிர்வாகம் தொடங்கப்பட உள்ளது.  அமெரிக்காவை பாதுகாப்புடனும், வளமுடனும் வைத்திருப்பதில் அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டுவோம்.  இதற்காக நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம். மிகவும் முக்கியமான வார்த்தை - அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வோம்,’’ என்றார்.

புளோரிடா வீட்டுக்கு சென்றார்

வெள்ளை மாளிகையை விட்டு குடும்பத்தினருடன் வெளியேறிய டிரம்ப், புளோரிடா மாகாணத்தில் பால்ம் பீச்சில் உள்ள அவருக்கு சொந்தமான மார்-எ-லாகோ எஸ்டேட்டிற்கு சென்றார்.  டிரம்ப் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவர் கட்டிடத்தில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பரில் மார்-எ-லாகோ எஸ்டேட்டிற்கு அதிகாரப்பூர்வமாக குடிபெயர்ந்தார். அவரது குளிர்கால வெள்ளை மாளிகை என வர்ணிக்கப்படும் மார்-எ-லாகோவை எஸ்டேட்டில் இனி அவர் நிரந்தரமாக தங்குவார் என தெரிகிறது. 20 ஏக்கர் பரப்பளவில் 128 அறைகள், 5 களிமண் டென்னிஸ் மைதானங்கள், 20,000 சதுர அடி பரப்பளவிலான பால்ரூம் எனப்படும் நடன அரங்கு ஆகியவை கொண்டது மார்-எ-லாகோ எஸ்டேட்.

மாறும் டிவிட்டர் கணக்குகள்

அமெரிக்க அதிபரின் ஆட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட @POTUS, @WhiteHouse, @FLOTUS, @VP உள்ளிட்ட டிவிட்டர் கணக்குகள், யாருடைய தனிப்பட்ட கணக்கும் கிடையாது. இந்த கணக்குகள் அனைத்தும் அமெரிக்காவின் அதிபர், அமெரிக்காவின் முதல் பெண்மணி, துணை அதிபர் போன்ற அதிகாரப் பதவிகளின் சுருக்க பெயராகும். இனி, இந்த கணக்குகள் பைடனின் நிர்வாகத்துக்கு ஒதுக்கப்படும்.  பைடனின் தற்போதைய @PresElectBiden இனிமேல் @POTUSக்கு மாற்றப்படும். இதுவரை டிரம்பை பின்பற்றியவர்கள் விலகி விடுவார்கள்.  பைடன் ஆதரவாளர்கள் அந்த கணக்கை பின்தொடருவார்கள் என்று கூறப்படுகிறது.

வாடகை விமானத்தில் வந்தார்

பைடன் பதவியேற்பதற்காக தனது சொந்த ஊரான டெலாவேரில் இருந்து வாஷிங்டன் வருவதற்கு கூட அதிபர் டிரம்ப் விமான ஏற்பாடு செய்யவில்லை. இதனால், பைடன் வாடகை விமானத்தில் வாஷிங்டனுக்கு வந்து சேர்ந்தார்.

Related Stories:

>