கேபிடாலில் நடந்த வண்ணமயமான பதவியேற்பு விழா அதிபராக பதவியேற்றார் பைடன்: துணை அதிபரானார் கமலா ஹாரிஸ்: மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் கேபிடாலில் நடந்த வண்ணமயமான விழாவில் நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகவும் வலிமையான வல்லரசான அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் 3ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 306 எலக்டோரல் ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வென்றார்.  4 ஆண்டாக பல்வேறு சர்ச்சைகளுடனும், சாதனைகளுடனும் ஆட்சி செய்த அதிபரும், குடியரசு கட்சியின் வேட்பாளருமான டிரம்ப் 232 வாக்குகளுடன் தோல்வியை தழுவினார்.

தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப், பல்வேறு நீதிமன்ற படியேறியும் பைடனின் வெற்றியை தடுக்க முடியவில்லை. பைடனின் வெற்றியை எதிர்த்து, கடந்த 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் பெரும் வன்முறை போராட்டத்தை நடத்தினர். நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது உலகளவில் கடுமையாக கண்டிக்கப்பட்டது. இதனால், பெருத்த அவப்பெயருடன் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

அமெரிக்க அரசியலமைப்புபடி பல்வேறு நடைமுறைகளுக்குப் பின், தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டரை மாதங்களுக்குப் பிறகு புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிடால் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்ததால், வாஷிங்டனில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பதவியேற்பு விழா நாடாளுமன்றத்தின் மேற்கு பக்கத்தில் நடந்தது. கொரோனா அச்சுறுத்தலால், உலக தலைவர்கள் யாரும் இதற்கு அழைக்கப்படவில்லை.

அமெரிக்க முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யு புஷ், பாரக் ஒபாமா உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர். பதவியில் இருந்து வெளியேறும் டிரம்ப், பதவியேற்பு விழாவை புறக்கணித்து பாரம்பரிய வழக்கத்தை உடைத்தெறிந்தார்.  உள்ளூர் நேரப்படி காலை 11 மணி அளவில் பிரார்த்தனையுடன்  விழா தொடங்கியது. பிற்பகல் 12 மணியளவில் பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார். 78 வயதாகும் இவர் அமெரிக்காவின் வயதான அதிபரும் ஆவார். 127 ஆண்டு பழமையான தனது குடும்பத்தின் பைபிளை வைத்து தனது மனைவி ஜில் பைடனுடன் அதிபர் பைடனும் பதவிப் பிரமாணம் ஏற்றார். அவருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர்,  அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளி, கறுப்பினத்தை சேர்ந்த, தெற்காசியாவை சேர்ந்த துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார். பின்னர், பைடனும், கமலாவும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். இந்த நிகழ்வுகள் அமெரிக்க டிவி சேனல்களிலும், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களிலும் நேரடியாக ஒளிரப்பு செய்யப்பட்டது. பைடனுக்கும், கமலா ஹாரிசுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல் கையெழுத்து இந்தியர்கள் மகிழ்ச்சி

அதிபராக பதவியேற்ற முதல் நாளில் பைடன் 17 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய உத்தரவுகள் அடங்கும். முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம், 100 நாட்கள் மாஸ்க் அணிதல் கட்டாயம் உள்ளிட்ட 17 உத்தரவுகளில் அவர் கையெழுத்திட்டார். மேலும், சட்ட விரோத குடியேற்றம் மற்றும் ஒவ்வொரு நாட்டிற்கும் வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன்கார்டு வழங்குதல் போன்றவை குறித்த குடியேற்ற மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், கிரீன் கார்டு வழங்குதலில் உள்ள தடை நீக்கப்படும் என்பதால் அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முதல் உரையை தயாரித்த இந்தியர்

அதிபராக பதவியேற்றதும் பைடன் நாட்டு மக்களுக்கு முதல் உரையாற்றினார். இதில், அமெரிக்கர்கள் இனவேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு இருக்க வேண்டுமென பைடன் வலியுறுத்தினார். அவரது முதல் உரையை, இந்திய அமெரிக்க பேச்சாளர் வினய் ரெட்டி தயாரித்து கொடுத்துள்ளார்.

Related Stories:

>