×

திருப்போரூர் - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை அரைகுறை பணியுடன் கிடப்பில் உள்ளதால் விபத்து அபாயம்

* வாகன ஓட்டிகள் அச்சம்
* மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள்

திருப்போரூர்: திருப்போரூர் - செங்கல்பட்டு நான்கு வழிச்சாலை பணி, அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயத்தில், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகிறன்றனர்.திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 27 கிமீ தூரம் இரு வழிப்பாதையாக உள்ள இச்சாலையை சுமார் ரூ.117 கோடியில் நான்கு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது. சுமார் 75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் திடீரென சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் திருப்போரூர், செம்பாக்கம், ரெட்டிக்குப்பம், முள்ளிப்பாக்கம் ஆகிய இடங்களில் சாலைப்பணிகள் முழுமையாக முடிக்காமல் உள்ளன. பல இடங்களில் மரங்களை அகற்றாமலும், மின் கம்பங்களை அகற்றாமலும் விடப்பட்டுள்ளது. இதையொட்டி, சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் திடீரென சாலை குறுகுவதாலும், சாலையின் நடுவே மின் கம்பங்கள் அகற்றாமல் இருப்பதாலும் விபத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்வோருக்கு சாலையின் பல இடங்களில் அரைகுறையாக, பள்ளங்களும், மேடுகளும் அப்படியே விடப்பட்டுள்ளதால் வாகனங்களை ஓட்டிச்செல்வதில் பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சாலைப்பணி அரைகுறையாக விடப்பட்டுள்ள இடங்களிலும், மின் கம்பங்கள் அகற்றப்படாத இடங்களில் எவ்வித எச்சரிக்கைப் பலகைகளோ, அறிவிப்புகளோ வைக்கவில்லை.

குறிப்பாக, இரவு நேரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லை. இதனால், பணி முடிக்கப்படாத இச்சாலையில் வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், இந்த சாலைப்பணிகளை ஆய்வு செய்து, விரைந்து முடிக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள மின் கம்பங்களை அகற்றி பாதுகாப்பான வாகனப் பயணத்துக்கு உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் காதில் வாங்காமல் மெத்தன போக்கில் உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

Tags : Thiruporur ,road ,Chengalpattu ,state , Thiruporur - Chengalpattu four lanes Risk of accident due to lying with half work
× RELATED காஞ்சிபுரம் தொகுதியை பாமகவுக்கு...