சென்னை, கோவை உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு

சென்னை: முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரை தொடர்ந்து கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர். இதில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல கிறிஸ்தவ மத போதகரான டி.ஜி.எஸ்.தினகரன், கடந்த 1983ம் ஆண்டு ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் கிறிஸ்தவ மத பிரச்சார கூட்டங்கள் நடத்தி வந்தார். பின்னர் 1986ம் ஆண்டு முதல் கோவையில் காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் பள்ளி தொடங்கி நடத்தி வந்தார். இவரது பிரசார கூட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழகத்தில் மிகவும் சக்திவாய்ந்த மத போதகராக டி.ஜி.எஸ்.தினகரன் திகழ்ந்து வந்தார். இதனால் தமிழகம் முழுவதும் மத பிரசார கூடங்கள் தொடங்கப்பட்டன.

பின்னர் கடந்த 2008ம் ஆண்டு டி.ஜி.எஸ்.தினகரன் உயிரிழந்தார். அவரை தொடர்ந்து அவரது மகன் பால் தினகரன் தனது தந்தை நடத்திய ‘இயேசு அழைக்கிறார்’ குழுமம் மற்றும் காருண்யா பல்கலைக்கழகத்தை தற்போது வழிநடத்தி வருகிறார்.

பால் தினகரன் நடத்தும் குழுமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் நிதி வந்ததாக கூறப்படுகிறது. அந்த நிதிக்கு முறையாக மத்திய அரசுக்கு வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அதைதொடர்ந்து, நேற்று காலை 8 மணிக்கு 250 வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுவாக பிரிந்து ஒரே நேரத்தில் பால் தினகரன் நடத்தும் சென்னை பாரிமுனை, அடையார், கிரீன்வேஸ் சாலை, தாம்பரம், வானகரம், கோவை உள்ளிட்ட ‘இயேசு அழைக்கிறார்’ பிரச்சார கூடங்கள் மற்றும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பால் தினகரன் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 28 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

இந்த சோதனையின் போது, பால் தினகரனுக்கு சொந்தமான அலுவலகத்தில் உள்ள தொலைபேசி இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. அதேபோல் பிரச்சார கூடங்கள், காருண்யா பல்கலைக்கழகத்தில் இருந்து ஊழியர்கள் யாரையும் அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. பணிக்கு வந்த ஊழியர்கள் யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனையில் இயேசு அழைக்கிறார் குழுமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், கனிணியில் இருந்து இருவிதமான கணக்கு விபரங்களும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து  விசாரணை நடத்தி வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சோதனை நாளையும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முடிந்த பிறகு வருமான வரி முறைகேடு குறித்த தகவல்கள் முழுமையாக தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்லூரி, அலுவலகங்களில்....

கோவையில் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனின் கல்லூரி, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவையில் பால் தினகரனுக்கு சிறுவாணி ரோடு காருண்யா நகரில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், வீடு, அலுவலகம், ஜெபக்கூடம், ரிசார்ட்ஸ் போன்றவை உள்ளன. இங்கே நேற்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் 16 பேர் ஒரே நேரத்தில் 4 குழுவாக பிரிந்து சென்று பல மணி நேரம் சோதனை நடத்தினர். காருண்யா குழுமத்தின் வருமானம், சொத்து விவரம், வருமான வரி செலுத்திய விவரங்கள் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. புலியகுளம் பகுதியில் உள்ள காருண்யா கிறிஸ்துவ பள்ளியிலும், அவினாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெபக்கூடத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை காரணமாக காருண்யா குழும கல்லூரி, பல்கலைக்கழகம், அலுவலக வளாகத்தில் வெளி நபர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Related Stories:

>