×

உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் படியே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது: அரசு பதில்

சென்னை: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன. இந்த வழக்குகளுக்கு பதிலளித்து தமிழக அரசு சார்பில் உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் பதில்மனு தாக்கல் செய்தார். அந்த பதில்மனுவில், தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதைப் போல, தமிழகத்திலும் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த ஆலோசனையை ஏற்று இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை இழந்த ஏழு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ரம்மி விளையாட்டு திறமைக்கானது என்றாலும் பந்தயம் வைத்து விளையாடினால் அது குற்றமாகும். பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சூதாட்டத்தை வர்த்தகமாக கருத முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,  மனுவிற்கு விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில்  கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,  விசாரணையை பிப்ரவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



Tags : High Court ,Government , Online games banned on High Court advice: Government responds
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...