தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தக்கூடாது என்பதால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 70 சதவீதம் குறையும்: ஊழியர்கள் தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தக்கூடாது என்பதால் டாஸ்மாக் கடைகளில் 70 சதவீதம் விற்பனை குறையும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பரவிய கொரோனா நோய் தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் துவங்கியது. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தக்கூடாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் இனி 70 சதவீதம் மதுவிற்பனை சரிவு ஏற்படும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் தோறும் ₹90 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மது அருந்தக்கூடாது என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், டாஸ்மாக் கடைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறையும். உதாரணமாக 50 ஆயிரம் பேர் வரும் ஒரு கடைக்கு இனி 20 ஆயிரம் பேர் மட்டுமே மதுவாங்க வருவார்கள். வாடிக்கையாளர்கள் குறைந்தால் மதுவிற்பனையும் குறையும். அந்தவகையில் 70 சதவீதம் மதுவிற்பனை குறைய வாய்ப்புள்ளது. நாள் தோறும் 4 லட்சம் வருவாய் கிடைக்கும் கடைகளில் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை மட்டுமே வருவாய் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.

எத்தனை மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எத்தனை மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என்பது குறித்து மருத்துவர் பூபதி ஜான் கூறியதாவது: மது அருந்துபவர்களுக்கு எந்த நோயாக இருந்தாலும், தொற்றாக இருந்தாலும் அது எளிதாக வருவதற்கு வாய்ப்புள்ளது. மது அருந்துவதன் மூலம் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். தற்போது நாம் கொரோனா தொற்று வராமல் இருக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் தான் தடுப்பூசி போட்டுக்கொள்கிறோம். தடுப்பூசி போட்டுக்கொண்ட உடனே மது அருந்துபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது இல்லாமல் போய்விடும். இதனால், அவர்களுக்கு தடுப்பூசி போட்டும் பலன் இல்லை.

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க 2 முறை தடுப்பூசி போடவேண்டும். எனவே தான் முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 வாரத்திற்கு முன்பாகவும், தடுப்பூசி போட்ட பின் 3 வாரத்திற்கு பிறகும், இதைத்தொடர்ந்து 2ம் தடுப்பூசி போட்ட 3 வாரத்திற்கு பிறகும் மது அருந்தக்கூடாது. மொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 2 மாதத்திற்கு எந்தவித காரணத்திற்கும் மது அருந்தக்கூடாது. மேலும், இதுகுறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். இவ்வாறு கூறினார்

Related Stories:

>