மண்பாண்டத் தொழிலுக்கு உலகிலேயே முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம்! வேலூரில் அமைகிறது!!

மனிதனின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் என்றால், அதைக்கொண்டு உருவான முதல் தொழில் மண்பாண்டத் தொழில். உலோகப் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதும் மண்பாண்டங்கள் அருகிப் போய்விட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் லோகேஷ்.சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலைகள் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். அதே கல்லூரியில், காட்சி தகவலியல் துறை பட்டயப் படிப்பில் சிறந்த மாணவன் விருதையும் வென்றவர். தமிழில் வெளிவந்த அணு உலை குறித்த ஒரே ஆவணப்படமான ‘உயிர் உலை’யின் இயக்குநர் இவர்தான். தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று ஓவியப் புத்தகமான ‘ஈழம்-87’ புத்தகத்தையும் இவர்தான் பதிப்பித்திருக்கிறார். சாலை விபத்தில் மறைந்த நிருபர் ஷாலினியின் கவிதைகளை தொகுத்து ‘பாரதியாழ்’ என்ற அவரது புனைப்பெயரிலேயே வெளியிட்டுள்ளார்.

பன்முகத்திறமை கொண்ட இளைஞரான லோகேஷை சந்தித்துப் பேசினோம்.“மண்பாண்டம் உள்பட மரபுத் தொழில்களை மீட்க பிரத்யேகமான கல்வி முறை, வியாபார யுக்திகள் தேவைப்படுகிறது. மண்பாண்டத் தொழிலை பயிற்றுவிப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. மண்பாண்டம் உள்ளிட்ட அனைத்து மரபுத் தொழில்களுமே ஏதோ ஒரு சாதிய அடிப்படையிலான தொழிலாக இருக்கும். குறிப்பாக மண்பாண்ட தொழிலை குயவர்கள் அல்லது குலாலர் என்கிற இனத்தவர் செய்து வருகின்றனர். மண்பாண்டத் தொழிலை பிற சாதியினர் கற்பதில் மனத்தடை இந்தக் காலத்திலும் இருக்கிறது. மனித நாகரிகத்தின் தொட்டில்களில் வளர்ந்த கலை, இன்று சாதிய வேறுபாடுகளால் அழியும் நிலைக்குப் போய்விட்டது. சாதியைக் கடந்த தொழில்களே நிறுவனமயமாக்கப்பட்டு சிறப்பான வளர்ச்சிகளை பெற்றிருக்கிறது என்பது யதார்த்தம். மண்பாண்டத் தொழிலும் இத்தகைய வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் இந்த மனத்தடை முற்றிலுமாக ஒழிய வேண்டும்.

இப்போது மண்பாண்டக் கலையை கற்பிப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது இத்தொழிலை செய்து வருபவர்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இருக்க மாட்டார்கள். இத்தொழிலை புதிதாக கற்கவும், பயிற்றுவிக்கவும் முறையான கல்வி இல்லை. மண்பாண்டத் தொழில் மூலமாக போதுமான வருவாய் ஈட்ட முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. இந்நிலை நீடித்தால் மண்பாண்டங்களை கையால் தொடும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.   மண்பாண்டத் தொழில் செய்ய களிமண், சவுடு மணல் சேகரித்து வைத்தல், களிமண்ணை சலித்தல், மண்ணை மிதித்து பதப்படுத்துதல், மண்பாண்டங்களை வெயிலில் காயவைத்தல், கடைசியாக சூலையிடுதல் உள்ளிட்டவற்றிற்கு ஒரு நபருக்கு  குறைந்தது 10 சென்ட் நிலமாவது தேவைப்படும். அந்த அளவு நிலம் வைத்துக்கொண்டு தொழில் தொடங்கும் நிலையில் யாரும் இல்லை. எனவே மண்பாண்டத் தொழில்களுக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும்.

முதல் கட்டமாக எங்களுடைய வேலூர் மாவட்டத்தில் மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கம் என்ற எனது எண்ணத்தை ஒரு திட்ட அறிக்கையாக தயார் செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அவர்களிடம் வழங்கினேன். அதை ஏற்ற அவர் உடனடியாக இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக கூறியதோடு அதற்கான அலுவல் ரீதியான கடிதத்தையும் அனுப்பி இருக்கிறார்.மண்பாண்டத் தொழிலுக்கான இலவச பயிற்சி கூடம், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கான பொதுக்களம், பொது மின் மண் பிசையும் இயந்திரம், பொது மின் சூளை அடுப்பு, பொது விற்பனை களம், மக்களின் கவனம் ஈர்க்கும் வகையில் உலகத்தின் மிகப்பெரிய 20 அடி உயரத்துக்கு களிமண் பானை உருவாக்கி கின்னஸ் சாதனை செய்தல், அதை சுற்றி பூங்காவும், பூங்காவை சுற்றி மண்பாண்ட கடைகள் மற்றும் மண்பாண்ட சமையலில் பெருமையை விளக்கும் வகையில் மாதிரி மண்பாண்ட சமையல் கூடம் போன்ற அம்சங்கள் என்னுடைய திட்ட அறிக்கையில் இடம்

பெற்றிருக்கிறது.

இதுமட்டுமின்றி ஆன்லைன் மண்பாண்ட விற்பனை ஆப் உருவாக்குதல், வேலூர் மாவட்டம் முழுவதும் மண்பாண்ட விற்பனை நிலையங்கள் உருவாக்க வேண்டும்என்றும் கோரியிருக்கிறேன். இதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கான நோக்கம், பொது இடத்தில் பொருட்களை விற்பனை செய்வது போலவே தயாரிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக மண்பாண்டங்களை சூளையிடுவதற்கு குறிப்பிட்ட நிலம் தேவைப்படும். குடியிருப்பு பகுதியில் சூளையிடுவதால் உருவாகும் புகை மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும். ஒவ்வொரு தனிநபர்களும் தனி இடம் தேடி அலைவதைவிட, பொருளாதார மண்டலத்தில் இருக்கும் இடத்தை சுழற்சி முறையில் அனைவரும்பயன்படுத்தலாம்.

இங்கு வருபவர்கள் ஒரு மரபுத் தொழிலை கற்பது, மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, சந்தைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து வகையிலும் புலமைப்பெற்றவராக இருப்பார். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு கற்றுத்தந்தாலே போதுமானது, அவரே மற்ற உறுப்பினர்களுக்கு தொழிலை கற்றுத் தரலாம். மண்பாண்டம் உள்பட மரபுசார்ந்த தொழிலை கற்பித்து ஊக்கப்படுத்துவதால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், அவரவர் வாழ்விடத்திலேயே தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படும், அந்தந்த வட்டாரத்தின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும், மரபு வழியில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு எப்போதுமே ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் உண்டு, சுயதொழில் முனைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இடைத்தரகர்கள் இன்றி உற்பத்தியாளரே விற்பனையாளராக இருப்பதால் உழைக்கும் மக்களுக்கான அங்கீகாரம் உறுதி செய்யப்படும்.

மண்பாண்டத் தொழிலை மீட்பதால் கிடைக்கும் நீண்ட கால நன்மைகளில் முதன்மையான ஆரோக்கியமான மனித சமுதாயத்தை உருவாக்குவதே. சமீபகாலமாக 30 வயதை கடந்தவர்களுக்கு அல்சர் என்னும் குடல்புண் பாதிப்பு சர்வ சாதாரணமாக தென்படுகிறது. பசிக்கும் நேரத்தில் உணவை தவிர்ப்பதே அல்சர் உண்டாக்கும் என்று கூறுவார்கள். ஆனால், தினந்தேறும் நேரம் தவறாமல் சாப்பிடுபவர்களுக்கு கூட அல்சர் பாதிப்பு வரும். அதற்கு உலோகப் பாத்திரங்களில் சமைப்பதும் ஒரு காரணம். ஒரு அலுமினிய பாத்திரத்தை வாங்கிவிட்டால் குறைந்தது 10 வருடமாவது பயன்படுத்துகிறோம். வாங்கும்போது ஒரு கிலோ இருக்கும் அலுமினியப் பாத்திரம் 10 வருடங்களுக்கு பிறகு 950 கிராம் இருக்கும் என்றால், அந்த தேய்மானம் நமது உணவில் தானே கலந்திருக்கும். குறிப்பாக பிரியாணி கடைகளில் கரண்டியால் கிளறும்போது ஏற்படும் கீரலால் விழும் துகள்கள் உணவில் தானே கலக்கும். இது அளவில் சிறியது என்றாலும் ஏற்படுத்தும் பாதிப்பு பெரிது.நாம் திட்டமிட்டிருப்பது போல நடந்தால் வேலூர் கோட்டை, சி.எம்.சி.மருத்துவமனை, வி.ஐ.டி.பல்கலைக்கழகம், தங்க கோயில் வரிசையில் வேலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மண்பாண்டத் தொழிலுக்காக அமைக்கப்படும் உலகின் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலமாக இருக்கும்” என்று லோகேஷ் சொல்கிறார்.

Related Stories:

>