×

விபத்து நேரிட்டால் யார் பொறுப்பு?: செங்கல்பட்டில் முதல்வரை வரவேற்று நெடுஞ்சாலையில் அ.தி.மு.க பேனர்கள்..!!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு முதல்வர் செல்லவேண்டியுள்ளதை ஒட்டி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக-வினர் வைத்துள்ள பேனர்களால் விபத்து ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். திருப்போரூர், புதுப்பட்டினக்குப்பம், செய்யூர், மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.

இதனையொட்டி நீதிமன்ற உத்தரவை மீறி அதிமுக-வினர் வைத்துள்ள பேனர்களால் இடையூறு ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தில் இருந்து பல்லாவரம் வரை வழிநெடுகிலும் முதலமைச்சரை வரவேற்க வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே சாலையோரம் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத பேனர்களை நகராட்சி மற்றும் காவல்துறையினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் ஒருவர் தெரிவித்ததாவது, அச்சம் ஏற்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை முழுவதும் அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் தெரிவித்தால் நகராட்சி, காவல்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். சட்டத்தை போடுபவர்களே சட்டத்தை மீறுகிறார்கள். வேலியே பயிரை மேய்கிறது எனில் எதற்காக இந்த சட்டம் என கேள்வி எழுப்பினார்.


Tags : accident ,ADMK ,Chengalpattu ,highway , Chengalpattu, Chief, Welcome, Highway, ADM Banners
× RELATED பிரசார வாகனத்தில் ஏறினால் வெயில்...