×

வழியனுப்பும் விழாவில் டிரம்ப் பிரார்த்தனை; கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி: இன்றிரவு அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் உருக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இன்று இரவு ஜோ பிடன் பதவியேற்க உள்ளார். முன்னதாக கொரோனாவால் பலியான 4 லட்சம் அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தனக்கு நடந்த வழியனுப்பு விழாவில் டிரம்ப் புதிய அரசுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறினார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக தேர்வானார். இன்று (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) அவர் பதவி ஏற்கிறார். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பதவி ஏற்கிறார்.

கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் டிரம்ப் ஆதரவாளர்களால் நடைபெற்ற வன்முறைக்கு பின்னர், அதிபர் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாஷிங்டன் முழுவதும் 25 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்கும் முன் ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதியாக பதவியேற்கும் கமலா ஹாரிஸ் ஆகியோர் இந்திய நேரப்படி இன்று அதிகாலை லிங்கன் மெமோரியாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதனால் இறந்த சுமார் 4,00,000க்கும் அதிகமானோருக்கும் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது ஜோ பிடன் பேசுகையில், ‘ெதாற்றால் இறந்தவர்களை நினைவில் கொள்வது கடினமாக உள்ளது. வாஷிங்டனில் நேஷனல் மாலின் குளத்தில் பிரதிபலிக்கும் ஒளி போன்று இருளில் இருந்து பிரகாசிப்போம். உயிரிழந்த அனைவரையும் நினைவில் கொள்வோம்’ என்றார். இந்நிலையில், அதிபர் டிரம்ப் தனது ஜனாதிபதி பதவியில் இருந்து இன்று விடைபெறுகிறார். அதற்கு முன் நடந்த  வழியனுப்பு விழாவில் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர்  பேசுகையில், ‘அமெரிக்க நாடானது ஒளி மிகுந்த, நம்பிக்கை வாய்ந்த மற்றும்  அமைதியை விரும்பும் மக்களை கொண்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாட்டை மறுகட்டமைப்பு செய்ய மிக பெரிய முயற்சியை தொடங்கினோம்.

எனது பதவி காலம்  நிறைவடைகிறது.  நாம் ஒன்றிணைந்து செய்த சாதனைக்காக உண்மையில் பெருமையுடன் உங்கள் முன் நிற்கிறேன். எப்போதும் வன்முறையை சகித்து கொள்ள  முடியாது. சீனா மீது வரலாறு காணாத வரி விதிப்புகளை மேற்கொண்டோம். சீனாவுடன் பெரிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால், அதற்கான ஈரம் காய்வதற்குள் முழு உலகமும் சீன வைரசால் பாதிக்கப்பட்டது. இந்த வாரம்,  நாட்டில் புதிய நிர்வாகம் தொடங்க உள்ளது. அமெரிக்காவை பாதுகாப்புடனும், வளமுடனும் வைத்திருப்பதில் அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டுவோம். நமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம்’ என்று பேசினார்.

டிரம்ப் தனது உரையில், இன்றிரவு அதிபராக பதவியேற்கும் ஜோ பிடனின் பெயரை குறிப்பிடவில்லை. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், அதிகபட்சம் 1,200 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ஜி.ராபர்ட் ஜோ பிடனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடுவார். அதன்பிறகு அதிபராக பதவியேற்ற பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் கேபிடல் ஹில்லில் இருந்து வெள்ளை மாளிகைக்கு பலத்த பாதுகாப்புடன் செல்வார்கள். வழக்கமாக இதுபோன்ற நிகழ்வில் சுமார் 3 லட்சம் பேர் சாலையின் இருபுறமும் நின்று பார்ப்பார்கள். ஆனால், இந்த முறை அவ்வாறு நடக்காது.

சிறப்பு விருந்தினர்கள்
ஜோ பிடன் அதிபராக பதவியேற்கும் விழாவில் அதிபர் பதவியில் இருந்து இன்று வெளியேறும் டொனால்ட் டிரம்ப் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் பங்கேற்கிறார். மேலும், முன்னாள் ஜனாதிபதிகள் பில் கிளிண்டன், ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகிேயாரும் பங்கேற்கின்றனர்.

பாதுகாப்பு வளையம்
கேபிடல் ஹில்லில் இருந்து வெள்ளை மாளிகை வரை சுமார் 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ‘ஜீரோ ஃபெயில் மிஷன்’ என்று அழைக்கப்படும் எந்த சந்தர்ப்பத்திலும் குழப்பத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவும் விழிப்புடன் செயல்படுகிறது. முழு நாடாளுமன்ற வளாகமும் சுமார் 2 மீட்டர் உயரமான வேலிகளால் சூழப்பட்டுள்ளது. கேபிடல் ஹில் அருகே சாலைகள் மூடப்பட்டுள்ளன. வாஷிங்டன் பூங்கா மூடப்பட்டுள்ளது.
 
காணொலி விழா
ேஜா பிடனின் பதவியேற்பு விழாவானது பொதுமக்கள் பங்கேற்காத காணொலி காட்சி மூலமே நடைபெறும். மாகாண தலைநகரங்களில் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொேரானா முன்களப் பணியாளர்கள் பதவியேற்பு நிகழ்வில் கவுரவிக்கப்படுகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சாதாரண மக்களுக்கு பதவியேற்பு விழா அனுமதி டிக்கெட் வழங்கவில்லை. அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து காணொலி காட்சி மூலம் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Trump ,handover ceremony ,Americans ,Corona ,Joe Biden , Trump prays at the handover ceremony; Tribute to 4 lakh Americans killed by Corona: Joe Biden melts before taking office tonight
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...