ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விரைவில் வீடு வழங்க கோரிக்கை

குன்னூர் : ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்காக கட்ப்பட்டு முதலமைச்சர் திறந்து வைத்த வீடுகள் பயனற்ற நிலையில் உள்ளது. இதனை விரைவில் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் ஆற்றினை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது.

ஆற்றின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி குன்னூர் ஆற்றின் கரையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு மாற்று வீடு திட்டத்தின் படி, கேத்தி அருகே உள்ள பிரகாசபுரம் பகுதியில் 172 மாற்று வீடுகள் கட்டப்பட்டது. அதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையில் குன்னூர் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வாழும் மக்களை பாதுகாப்பு கருதி சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். கன்னிமாரியம்மன் கோயில், எம்.ஜி.ஆர். குப்பம், சித்தி விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகள் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது‌‌.

எனவே அவர்களுக்கு மாற்று வீடு வழங்க அரசு சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆய்வுகள் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதற்கு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர். நகர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள 87 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 16 வீட்டில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். ஆனால், இது வரை அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் நேரில் திறந்து வைத்த வீடுகள் பயனற்று கிடக்கிறது. விரைவில் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>