×

வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு ஏற்காடு ஏரியில் படர்ந்து கிடக்கும் ஆகாய தாமரை-படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம்

சேலம் : ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு ஆண்டு முழுவதும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக ஏற்காடு சுற்றுலா தலம் முடங்கிக்கிடந்தது. தற்போது. சுற்றுலா பயணிகள் வந்துச் செல்ல இருந்த தடை நீங்கியதால், வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

இதன்காரணமாக ஏற்காட்டில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை பார்க்க முடிகிறது. ஏற்காடு ஏரி படகு இல்லமும் திறக்கப்பட்டுள்ளது. அங்கு, சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். ஆனால், ஏரியில் பெரும்பாலான இடத்தில் ஆகாய தாமரை படர்ந்து நிரம்பிக் கிடக்கிறது. இதனால், நடுவில் குறைந்த அளவில் மட்டுமே தண்ணீர் வெளியில் தெரிகிறது. அந்த பகுதியில் மட்டும் படகுகளை இயக்க முடிகிறது.

சில நேரங்களில் மிதி படகு எடுத்துச் செல்லும் சுற்றுலா பயணிகள், ஆகாய தாமரைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். மோட்டார் படகுகளும், மிக ஆபத்தான முறைvயில் ஆகாய தாமரை கிடக்கும் இடத்தில் திரும்புகின்றன. இதனால், இந்த படகுகள் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே ஏரியில் நிரம்பிக் கிடக்கும் ஆகாய தாமரையை சுற்றுலாத்துறையும், உள்ளாட்சி நிர்வாகமும் அகற்றிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘ஏரியின் பாதியளவிற்கு மேல் ஆகாய தாமரை தான் நிரம்பி காட்சியளிக்கிறது. தண்ணீர் தெரியும் இடத்தில் ஆனந்தமாக சுற்றி வருகிறோம். இருப்பினும் ஓரமாக செல்லும்போது, மிகவும் பயமாக இருக்கிறது. அதனால், ஆகாய தாமரையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : tourist arrivals ,Yercaud Lake ,capsizing , Salem: Yercaud, popularly known as the 'Ooty of the Poor', attracts tourists from all over the country throughout the year.
× RELATED தமிழக கடற்கரைகளுக்கு நீலக்கொடி...