×

கடலில் வீணாகும் உபரி நீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா? பல வருடமாக போராடும் விவசாயிகள்

*குரலற்றவர்களின் குரல்

தா.பேட்டை :  திருச்சி மாவட்டத்தின் கடைக்கோடியில் தா.பேட்டை ஒன்றியம் அமைந்துள்ளது.இப்பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் திகழ்கிறது. கிணற்று பாசனத்தையும், போர்வெல் பாசனத்தையும், மழைநீரையும் மட்டுமே நம்பியுள்ளது. வானம் பொய்த்து போகும்போது நிலத்தடி நீர்மட்டமும் கீழே குறைந்து போகும். அந்த வேளையில் விவசாயிகள் தங்களது வயல்களை வெறும் தரிசு காடாகவே போட்டு வைக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் 1,000 அடி வரை போர் போட்டால் கூட தண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவு மாற்றுத்தொழிலை நம்பியே தங்களது வயிற்று பிழைப்பை நடத்தி வருகின்றனர்.

தா.பேட்டை ஒன்றியத்தில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் அமைந்துள்ளன. இந்த நீர்நிலைகளுக்கு மழை காலங்களில் வரும் தண்ணீரை சேமிப்பதற்கான இடமாகும். பல ஏரிகளுக்கும், குட்டைகளுக்கும் செல்லும் வரத்து வாய்க்கால்கள் தூர்ந்த நிலையில் உள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள நிலத்தை வைத்து கொண்டு மிகவும் பின்தங்கிய வறட்சி பகுதியில் வாழும் விவசாயியை ஏறெடுத்து பார்க்க அதிமுக அரசுக்கு நேரமில்லை.

காவிரியில் மழை வெள்ள காலங்களில் வீணாகும் உபரி நீரை திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரி , குளங்களுக்கு வாய்க்கால் மூலம் கொண்டு செல்ல வேண்டுமென பலஆண்டு கோரிக்கைக்காக விவசாயிகள் போராடி வருவதாகவும், ஆனால் அரசு தான் செவிசாய்க்காமல் இருந்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சேருகுடி கிராமத்தை சேர்ந்த துரைராஜ் கூறியதாவது: தா.பேட்டை ஒன்றியம் மானாவாரி விவசாய பகுதியாகும். கம்பு, மக்காச்சோளம் பயிர்கள் பிரதானமாக சாகுபடியாகிறது. கிணறு மற்றும் போர்வெல் பாசனம் உள்ள விவசாயிகள் வெங்காயம், மிளகாய், நெல், கரும்பு ஆகியவற்றை பயிரிடுகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு முப்போக சாகுபடி என்பது இயலாத காரியமாக உள்ளது.

பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து காவிரி ஆற்றில் மழை வெள்ள காலங்களில் வீணாக சென்று கடலில் கலக்கும் உபரிநீரை தா.பேட்டை ஒன்றிய விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாய்க்கால் மூலம் இப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால் கண்டு கொள்வார் தான் யாருமில்லை. வீணாக கடலில் கலக்கும் காவிரி தண்ணீர், தா.பேட்டை ஒன்றிய பகுதிகளுக்குள் புகுந்தால் விவசாயிகளின் வாழ்வு மலரும் என்பது உறுதியான ஒன்று. நீர்பாசன முறையில் தமிழர்களின் திட்டமிடல் மிகச்சிறந்த ஒன்று. அந்த வகையில் நீர்வழி பாதைக்கு பொறியாளர் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்து தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தால் ஏற்கனவே இருக்கும் வரத்து வாய்க்கால்கள் வழியாகவே கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை கொண்டு வந்துவிட முடியும். அவ்வாறு சேமிக்கும் தண்ணீர் மூலம் விவசாய பாசன நிலங்கள் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும். கிணறு மற்றும் போர்வெல்களில் நிலத்தடி நீர் உயர்வதற்கான வாய்ப்புள்ளது என்றார்.

தா.பேட்டையை சேர்ந்த கணேசன் கூறியதாவது: தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் மழைநீரை சேமிப்பதற்கு உரிய முறையில் தூர்வாருதல் வேண்டும். வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். புளியஞ்சோலையில் இருந்து மழைவெள்ள காலங்களில் வீணாகும் தண்ணீரை சிறு தடுப்பணை அமைத்து உபரிநீரை மகாதேவி ஏரிக்கு திருப்பிவிட வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும்.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இதற்கான திட்ட வரையறையும், அதற்கான நிதியை ஒதுக்கியும் அத்திட்டம் கைகூடாமல் போனது. தற்போது அத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு, புளியஞ்சோலை மகாதேவி வரையிலான கால்வாய் திட்டத்தை நிறைவேற்றி தருவதுடன் முசிறி காவிரி ஆற்றிலிருந்து கிளை வாய்க்கால் ஒன்று அமைத்து மழை வெள்ள காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு வந்து தர வேண்டும். இதனால் விவசாயம் செழிப்படைந்து மிகவும் பின்தங்கிய வறட்சி
பகுதியாக உள்ள தா.பேட்டை ஒன்றியம் வளம்பெறும் பகுதியாக அமையும் என்றார்.

பல ஆண்டு கோரிக்கை

காவிரியில் மழை வெள்ள காலங்களில் வீணாகும் உபரி நீரை திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஏரி , குளங்களுக்கு வாய்க்கால் மூலம் கொண்டு செல்ல வேண்டுமென அப்பகுதி விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

Tags : sea ,lakes , Dhaka: The Dhaka Union Territory is located on the outskirts of Trichy district. Agriculture is the main occupation of the region.
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்