×

தமிழக சட்டமன்றத்துக்கு ஏப். மாத தொடக்கத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு!: தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்..!!

சென்னை: தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் மாத தொடக்கத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மே, ஜூன் மாதங்களில் சி.பி.எஸ்.சி. பள்ளி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல தமிழக அரசு தேர்வுகளும் அதே மாதங்களில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இஸ்லாமியரின் புனித ரம்ஜான், ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு வாக்குபதிவிற்கான தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். எனினும் தற்போதைய சூழலில் ஏப்ரல் 15ம் தேதிக்குள் சட்டமன்ற தேர்தலை முடிக்க வேண்டும் என்று ஆணையம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒருகட்டமாகவும், மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் 3 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.


Tags : Tamil Nadu Legislative Assembly ,Elections ,Election Commission , Tamil Nadu Legislative Assembly, April, Election, Election Commission circles
× RELATED தேர்தல் பிரசாரங்களில் விமானம்,...