×

வீட்டுமனைகளாக மாறிவரும் விளைநிலங்கள்-வருங்காலத்தில் உணவுக்கு கை ஏந்தும் அபாயம்

*குரலற்றவர்களின் குரல்

பழங்காலத்தில் காடு, மலைகளில் வாழ்ந்த மனிதன் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடினான். காடுகளில் கிடைத்த காய், கனிகளை உண்டு வாழ்ந்தான்.  உணவுக்காக காடு மலைகளில் திரிந்து நாடோடி வாழ்க்கை வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் தனக்கான வாழ்விடம் அமைத்ததுடன், உணவுத் தேவைக்கு காடு, மலைகளை சீர்படுத்தி தானியம் போன்ற பயிர் வகைகளை விவசாயம் செய்ய ஆரம்பித்தான். இதுதான் சர்வதேச அளவில் விவசாயம் தோன்றியதற்கான அடிப்படை வரலாறு.

கால ஓட்டத்தில் மன்னர் காலத்தில்  அதிகாரம் மிக்க ஒருசிலர் தனித் தனியாக கிணறு வெட்டி விவசாயம் செய்தாலும், அப்போதைய ஆட்சியாளர்களால் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டு பொது பயன்பாட்டுக்கு ஏரி, குளங்கள் வெட்டப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தி வந்தனர். இந்தியாவின் அதிலும் குறிப்பாக தமிழகத்தின் அடையாளமாகவும் முதுகெலும்பாகவும் உள்ளது விவசாயம். தமிழகத்தை பொறுத்தவரை காமராசர் ஆட்சியில்தான் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரின் வயிறையும் நிறைக்கும் உணவு உற்பத்தி அதிகரிக்க தமிழகமெங்கும் அணைகள் கட்டப்பட்டன. விவசாயமும் செழித்தது.  

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் கோமுகி அணை, மணிமுக்தாறு அணைக்கட்டுகள் மூலம் பழைய பாசன நிலங்கள் 5,860 ஏக்கரும், புதிய பாசன நிலங்கள் 5,000 ஏக்கரும் என மொத்தம் 10,860 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 500க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருப்பதாலும் கடந்த 2005ம் ஆண்டு வரை விவசாயம் நல்ல நிலையில் இருந்தது. இதனால் நெல் உற்பத்தியில் டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வந்தது. நெல் மட்டுமில்லாமல், கம்பு, சோளம், கேழ்வரகு, மரவள்ளி, கரும்பு, பருத்தி, வாழை போன்ற அனைத்து பயிர்களையும் விவசாயிகள் விரும்பி பயிர் செய்து வந்தனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக விளைபொருட்களுக்கு விலை குறைப்பு, உரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள்  விலையேற்றம், விவசாயத்திற்கு ஆள்பற்றாக்குறை, தொழிலாளர்கள் சம்பளம் உயர்வு, பருவமழை பொய்த்து பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை, நவீன தொழில்நுட்பங்களை கையாள முடியாதது போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயம் நலிவடைந்து போனது. எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது உழைப்பின் மீது விவசாயிகளுக்கு ஏற்பட்ட ஈடுபாடு குறைவும் விவசாயம் நலிவடைய காரணமாக உள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் அதிக பணம் கிடைப்பதால், இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைகளால் நன்றாக விளையும் நிலங்களையும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு விற்று விடுகின்றனர். சிலர் தரிசாக விவசாய நிலங்களை வருடக்கணக்கில் பயிர் செய்யாமல்  போட்டு விடுகின்றனர். விவசாய நிலங்களை விற்க ஆயிரத்தெட்டு நடைமுறைகள், வருவாய்த்துறையின் அனுமதி என இருந்தாலும், பத்திரப் பதிவுத்துறையிலும், வருவாய்த்துறையிலும் சிலரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதி கிடைத்துவிடுகிறது.

மேலும் பெரும்பாலான விளைநிலங்கள் உரிய அனுமதி இல்லாமலேயே வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உணவுக்கே அண்டை மாநிலங்களில் கை ஏந்தும் நிலை உருவாகிவிடும். ஆகையால்  நன்றாக விளையக்கூடிய விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு அரசாங்கம் தடைவிதிக்க வேண்டும். மேலும் விவசாயத்தில் ஆள்பற்றாக்குறையை சமாளிக்க நவீன தொழில்நுட்ப உத்திகளையும், இயந்திரங்களையும் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் அவர்களை தயார்படுத்துவதுடன், வேளாண்மைத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கிராமங்களில் விவசாயத்தில் ஈடுபாடு உள்ள இளைஞர்களை, விவசாயிகளை கண்டறிந்து விவசாய குழு அமைத்து விவசாய கருவிகளை மிகக் குறைந்த வாடகைக்கு கிடைத்திட ஏற்பாடு செய்து தர வேண்டும்.  விவசாயிகளின் விளைபொருட்கள் விலை குறைப்பை அரசு தடுக்க வேண்டும்.  அணைகளை தூர் வாருவதுடன், ஏரி, குளங்களையும் தூர் வார அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை பதப்படுத்துவது, சந்தைப்படுத்தவது, விளைபொருட்களை உணவுப் பொருளாக மாற்றுவது போன்ற பயிற்சிகளை கிராமந்தோறும் முழு ஈடுபாட்டோடு நடத்த வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு எளிதில் விவசாய கடன் குறைந்த வட்டியில் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்தல், விவசாயத்தில் நட்டம் அடையாமல் இருத்தல் போன்றவற்றுக்கு வழி செய்து நம்பிக்கை ஏற்படுத்தினால் மட்டுமே விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறாமல் காப்பாற்ற முடியும்.

‘கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்’

விவசாயதொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கஜேந்திரன் கூறுகையில்: ‘‘விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க சிறு, குறு விவசாயிகளுக்கு அரசாங்கம் கடனுதவி, வட்டியில்லா கடன், மானிய விலையில் விவசாய இடுபொருட்களை வழங்க வேண்டும். கிராம விவசாயிகளின் அறியாமையாலும், ஏழ்மையாலும் விளைநிலத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆகையால் விளைநிலங்களை விற்க முடியாத வகையில் அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கான அரசு திட்டங்கள் ஏட்டளவில் இல்லாமல் அவற்றை செயல்படுத்த அரசு முன்வரவேண்டும். அப்போதுதான் விளைநிலங்கள் வீட்டு மனைகளாவது தடுக்கப்படும்’’ என்றார்.

Tags : Farms ,homes , In ancient times man who lived in the forest and mountains hunted animals for food. Fruits and berries found in the wild
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி