×

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வேளாண்மை திட்டங்கள் தெரியாமல் தவிக்கும் விவசாயிகள்

* கடமைக்காக பணியாற்றி வரும் அதிகாரிகள்
*கல்வி அறிவு இல்லாத விவசாயிகள் வேதனை

*குரலற்றவர்களின் குரல்

வேலூர் : வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு அறிவித்த திட்டங்களை கிடைக்க செய்வதில் வேளாண்துறை காட்டும் அலட்சியம் விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.நாட்டின் ஜீவநாடியாக விளங்குபவை கிராமங்கள். அவையே நாட்டின் கோயில்கள் என்றார் மகாத்மா காந்தி. அந்தளவுக்கு கிராமங்களும், அவற்றை சார்ந்த விவசாயமும் நாட்டின் முதுகெலும்பாக மட்டுமின்றி பொருளாதாரத்தில் முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு அரசின் வேளாண்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? அதேநேரத்தில் செயல்படுத்தப்படுவதாக அரசால் உறுதிப்படுத்தப்படும் திட்டங்களின் பலன் விவசாயிகளை சென்றடைகிறதா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் வேளாண்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒரு சில திட்டங்கள் மட்டுமே அறிந்துள்ளனர்.

வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான திட்டங்களும், அரசின் பல்வேறு துறைகள் மூலம் விவசாயிகள் பலனடையும் திட்டங்கள் குறித்து, வேளாண் சார்ந்த அதிகாரிகளுக்கே தெரியவில்லை என்ற குற்றசாட்டுகளை விவசாயிகள் முன்வைக்கின்றனர். சில துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய விலையிலான பொருட்கள் குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கு மட்டுமே சென்றடைகிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

குறிப்பாக வேளாண்துறையில் அடங்கியுள்ள வேளாண் பொறியியல் பிரிவில் உள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பெரும்பாலான விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இத்துறையில் வழங்கப்படும் மானிய விலையிலான இயந்திரங்கள், வேளாண் கருவிகள் விவசாய பணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இத்துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படும் கருவிகள் குறித்து அதிகாரிகள் முறையாக விவசாயிகளுக்கு தெரிவிப்பதில்லை.

குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டுமே தெரிவிப்பதாக புகார்கள் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கருவிகள் பெறுவதற்கான வழிமுறைகளை கூட அதிகாரிகள் முறையாக தெரிவிப்பதில்லை என்று கல்வி அறிவு இல்லாத விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அதேபோல் தோட்டக்கலை துறையில் சிறு விவசாயிகளுக்கு முழு மானியத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தோட்டக்கலைத் துறையில் உள்ள சலுகைகள் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு இல்லை.

வேளாண்மை துறையில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணை பள்ளிகள், திறன் வளர் பயிற்சிகள், விவசாயிகள் கண்டுணர சுற்றுலா, செயல்விளக்க திடல் அமைத்து விவசாயிகளுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும், இதில் சிறந்த விவசாயி ஒருவரை தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் அனைத்து விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பு. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை வெளிமாவட்டங்களுக்கு சுற்றுலாவாக அழைத்து சென்று அங்கு பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், பயிரிடும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை சுற்றுலா அழைத்து செல்லும் போது, கடந்த ஆண்டு சென்றவர்களை தவிர்த்து மற்ற விவசாயிகளை அழைத்து செல்ல வேண்டும்.

அத்தகைய நடைமுறையை அதிகாரிகள் பயன்படுத்துவது கிடையாது. கடமைக்காக, வேளாண் அதிகாரிகள் அவர்களுக்கு தெரிந்த விவசாயிகளை மட்டுமே அழைத்து சென்று வருகிறார்கள். இப்படி வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் தெரிந்துகொள்ள முடிவதில்லை என்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் வேதனைக்குரலாக உள்ளது. விவசாய குறைதீர்வு கூட்டங்களிலும், கோட்ட, தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டங்களில் விவசாயிகள் புகார் எழுப்பி வருகின்றனர்.

வேளாண்மை துறையில் உள்ள திட்டங்களையே அறிந்து கொள்ளாமல் விவசாயிகள் எப்படி பயனடைய முடியும் என்பது அவர்கள் எழுப்பும் கேள்வி. இப்போதைய சூழலில் விவசாயிகள் பயிரிடும் விவசாய பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி, விவசாயத்தையே கைவிட்டு மாற்றுத்தொழிலை தேடிச்செல்லும் நிலையாக உள்ளது.

எனவே நாட்டின் அச்சாணியாக விளங்கும் விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும், சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்புநீர் பாசனம், ரெயின் கன், உழவர் உற்பத்தியாளர் குழு, விவசாயிகள் குழு, பொறியியல் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் மத்திய அரசு திட்டங்கள், மாநில அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண்துறை திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, கல்வி அறிவு இல்லாத விவசாயிகளுக்கும் எளிதில் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வேளாண்மை துறையில் கிடைக்கக் கூடிய சலுகைகள் என்னென்ன? இத்துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், அத்தகைய திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளை முழுமையாக சென்றடைய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வேளாண்துறையில் அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்கள் குறித்த கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

அதிகாரிகளுக்கு பயிற்சி தேவை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாண் அலுவலர், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகத்திற்கு சென்று, அரசின் திட்டங்கள் மற்றும் காப்பீடு குறித்து கேட்க சென்றால், புதிதாக வந்துள்ள வேளாண் அதிகாரிகளுக்கு, அத்திட்டங்கள் குறித்து தெரியாததால், விவசாயிகளுக்கு சரியான பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதேபோல், விவசாயிகளின் பிரச்னையை வேளாண் உதவி இயக்குனரிடம் தகவல் தெரிவிப்பதிலும் சிக்கல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே முதலில் வேளாண் சார்ந்த அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.


Tags : Vellore ,districts ,Tirupati ,Thiruvannamalai ,Ranipettai , Vellore: Agriculture will show availability of government announced schemes in Vellore, Tirupati and Ranipettai districts.
× RELATED ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக்...