காதில் ரத்தம் வழிந்து உயிரிழந்த காட்டு யானை மீது தீ, ஆசிட் போன்ற திரவத்தால் கொடூரமாக தாக்குதல்!: பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நேற்று உயிரிழந்த காட்டு யானையை தீ அல்லது ஆசிட் போன்ற திரவத்தால் கொடூரமாக தாக்கியிருப்பது பிரேத பரிசோதனையின் மூலமாக தெரியவந்திருக்கிறது. மசினகுடி பகுதியில் சில மாதங்களாக 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சுற்றி திரிந்தது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட அந்த யானைக்கு கடந்த மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து,  2 நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீண்டும் தாக்கியதில் யானையின் இடது காது கிழிந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த யானையை வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே யானை உயிரிழந்தது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் யானையின் பிரேத பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. யானையை பரிசோதனை செய்ததில் யானையின் காது பகுதியை பெட்ரோல் வைத்து எரித்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. மேலும் யானை மீது ஆசிட் ஊற்றி காயப்படுத்தியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காது பகுதி வெந்து யானை துடிதுடித்து இறந்ததும் தெரியவந்துள்ளது. இந்த காயத்தினால் யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறியிருக்கிறது.

யானையின் முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த பழைய காயத்தால் யானையின் 2 விலா எலும்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் யானை உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. யானையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் குறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. விசாரணையின் முடிவில் யானையை கொன்ற நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Related Stories:

>