நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்!: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது.. தமிழகத்தில் மொத்தம் 6,26,74,446 வாக்காளர்கள்..!!

சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 பேர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரம் பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பெண் வாக்காளர் எண்ணிக்கை ஆண்களை விட 9,90,254 அதிகமாக உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் உள்ளனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 40 லட்சத்து 57 ஆயிரத்து 3690 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் இருக்ககூடிய தொகுதியாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இதில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்திலேயே குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்கள் உள்ளனர். கவுண்டம்பாளையம், மாதவரம், மதுரவாயல், ஆவடி, பல்லாவரம் உள்ளிட்ட தொகுதிகளில் தலா 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். துறைமுகம், கீழ்வேளூர், ராயபுரம், கூடலூர், குன்னூர், எழும்பூர், நாகை ஆகிய 8 தொகுதிகளில் 2 லட்சத்திற்கும் குறைவான வாக்காளர்கள் உள்ளனர்.

Related Stories:

>