டெல்லியில் 56வது நாளாக போராட்டம்... உலக வங்கி, IMF உருவ பொம்மைகளை எரித்து பெண் விவசாயிகள் முழக்கம்

டெல்லி : டெல்லியில் 56வது நாளாக நடைபெறும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் 10ம் கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தை பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே நடைபெறுகிறது.  இதனிடையே டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சண்டிகரில் மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். விவசாயிகள் ஆதரவு பதாகைகளை ஏந்தி கொண்டு அவர்கள் சாலைகளில் திரண்டனர்.

காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பஞ்சாப் இளைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். பாடல்களை பாடி அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். லூதியானாவில் திரண்ட விவசாயிகள், உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பெயர்கள் பொறித்த உருவ பொம்மைகளை எரித்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.திக்ரி எல்லையில் பெண் விவசாயிகள் சர்வதேச நாணய நிதியம்-உலக வர்த்தக அமைப்பின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

இந்த போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ள விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்ததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்தினார்.

Related Stories:

>