10 நாளாகியும் சந்திக்க வராத கவர்னரை கண்டித்து முதல்வர், அமைச்சர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்: ஜனாதிபதியை சந்திக்க தேதி கேட்டு கடிதம்

புதுச்சேரி: 10 நாளாகியும் போராட்டம் நடத்தும் அமைச்சரை சந்திக்க வராத கவர்னரை கண்டித்து கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஆகியோர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, தனது துறைகளை சேர்ந்த 36 கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 10ம் தேதி இரவு முதல் சட்டசபையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். கவர்னர் கிரண்பேடி அழைத்து பேசி  உடனடியாக தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி இரவு-பகலாக போராட்டத்தை தொடர்ந்தார். ஆனால், 10 நாளாகியும் கவர்னர் கிரண்பேடி அழைத்து பேசவில்லை.

இந்நிலையில் நேற்று 11 மணியளவில் கவர்னர் மாளிகை உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த  சீனியர் எஸ்பி பிரதியுக்‌ஷா கொராடா, கவர்னர் அழைப்பு அனுப்பாமல் மேற்கொண்டு செல்ல முடியாது என தெரிவித்தார். இதனால், கந்தசாமி கவர்னர் மாளிகை எதிரே துண்டை விரித்து தரையில் அமர்ந்து கொண்டார். கந்தசாமியின் போராட்ட தகவல் கிடைத்ததும் அவரை சந்திக்க முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வைத்திலிங்கம் எம்பி, எம்எல்ஏக்கள் விஜயவேணி, ஜெயமூர்த்தி ஆகியோர் ராஜ்நிவாஸ் நோக்கி சென்றனர்.

அவர்களை குபேர் சிலை அருகே துணை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். முதல்வர் வந்திருப்பதாக தெரிவித்தும், துணை ராணுவத்தினர் கண்டு கொள்ளாததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்  அதிருப்தியடைந்த முதல்வர், எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதன்பின், சீனியர் எஸ்பி பிரதியுக்‌ஷா முதல்வர், அமைச்சரை  சந்தித்து,  இந்த போராட்டம் நீடித்தால் போலீஸ் உயரதிகாரிகள் எங்கள் மீதுதான்  நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.  இதையடுத்து முதல்வர், அமைச்சர் கந்தசாமியை சந்தித்து, போராட்டத்தை முடித்துவிட்டு வாருங்கள் என அழைத்தார். இதையடுத்து போராட்டத்தை அமைச்சர் விலக்கி கொண்டார்.

Related Stories:

>